Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு செந்தில்பாலாஜி சகோதரருக்கு குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை; இம்மாதம் 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேருக்கு கூடுதல் குற்றபத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம், உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றபத்திரிகையுடன், சுமார் 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிடபட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. குற்றப்பத்திரிகை சுமார் 50 ஆயிரம் பக்கம் உள்ளதால் அதனை படிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று குற்றம் சாடப்பட்டவர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 23ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.