புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் நடந்த கட்டண வசூல் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், மத்தியப்பிரதேசம், டெல்லி என்சிஆர் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 14 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினார்கள். காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுங்கக் கட்டண ரசீதுகளை உருவாக்குவதற்கு அங்கீகரிக்கப்படாத மென்பொருள் செயலிகளை பயன்படுத்தியதும், வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை அதிகாரப்பூர்வ கணக்கு நடைமுறைக்கு வெளியே வேறு வழிகளில் மாற்றியதும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடயவியல் ஆய்வு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஆவணங்கள் ஆகியவை இத்தகைய மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



