Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

11 ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் போடப்பட்ட 6,312 வழக்குகளில் 120 வழக்கில் மட்டுமே தண்டனை: நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையில், ‘கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அமலாக்கத்துறையினரால் மொத்தம் 6 ஆயிரத்து 312 சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெறும் 120 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2005 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1,185 வழக்குகள் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 2019ம் ஆண்டிற்குப் பிறகு மூலக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்ததால் 93 வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 38 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விசாரணை முழுமையாக முடிக்கப்பட்ட வழக்குகளைக் கணக்கிட்டால், 2020 முதல் 2025 வரை அமலாக்கத்துறையின் தண்டனை விகிதம் 92 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்டு வழங்கப்பட்டுள்ளன. நடைமுறை சிக்கல்கள் மற்றும் மூலக் குற்றங்களின் விசாரணையில் ஏற்படும் தாமதம் ஆகியவை வழக்குகளை விரைவாக முடிப்பதில் பெரும் சவாலாக உள்ளது’ என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.