*விவசாயிகள் எதிர்பார்ப்பு
வலங்கைமான் : மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த மிதவை தீவனம், மீன் குஞ்சுகளை மானியத்தில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கிய பின்னரே நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் மீன் வளர்ப்பினை பாதுகாத்திட மீன் வளர்ப்போருக்கு மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் ஆகியவற்றினை மானியத்தில் வழங்கிட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள எழுபத்தி ஒரு வருவாய் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சொந்தமான குளங்கள்உள்ளது .அதுபோன்று கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் என 75க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது.
இந்நிலையில் குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாகவும்மழைநீரை சேமிக்கும் வகையிலும் தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் 100 சதவீத மானியத்தில் பல்வேறு காலகட்டங்களில் 500க்கும் மேற்பட்ட பண்ணைக்குட்டைகள்அமைக்கப்பட்டன.
குறிப்பாக வேளாண்மைத் துறையின் மூலமும் ஊரக வளர்ச்சித்துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டது அதே போன்று மீன் வளர்ப்பு துறையின் மூலமும் விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டன.
அறநிலையத்துறைக்கு சொந்தமான குளங்கள் கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் பண்ணைக்குட்டைகள் ஆகியவற்றில் கெளுத்தி, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, ரோகு, கட்லா, விரால், மிர்கால் ஆகிய வளர்ப்பு மீன்இரகங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றது.டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்ட நிலையில் சுமார் 80 சதவீத குளங்கள் நிரம்ப வில்லை.
ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வைத்த கனமழையினை அடுத்து அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பின. குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் மார்ச் மாதத்தில் தண்ணீர்வேகமாக குறையும் நிலையில் சுமார் ஐந்து மாதங்கள் மட்டுமே மீன் வளர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதுகாலதாமதமாக நீர் நிலைகள் நிரம்பியதால் வழக்கத்தை விட கூடுதல் விலை கொடுத்து பெரிய அளவிலான மீன் குஞ்சுகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இக்குறைகளை களைய மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்றும் இதை ஊக்கப்படுத்தும் விதமாக வேளாண்மை பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதை போன்று மீன் வளர்ப்புக்குத் தேவையான மிதவை தீவனம் மீன் குஞ்சுகள் ஆகியவைகளை மானியத்தில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
