“100 வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்” ... என பாட்டாகவே பாடிடலாம் அப்படி இருக்கிறது மஞ்சுளாவின் எம்பிராய்டரியில் ஜொலிக்கும் மணமகன் - மணமகள் அன்பளிப்புகள். குறிப்பாக தலை அலங்காரம், அதில் அலங்கரிக்கப்பட்ட பூக்கள் என அச்சு அசல் மணப்பெண்ணின் கூந்தல் அலங்காரத்தைக் கொண்டு வந்துவிடுகிறார். ‘‘நான்தான் இந்த எம்பிராய்டரியை முதல்முறையாக செய்கிறேன் அப்படி எல்லாம் சொல்ல முடியாது. எனக்கு முன்பே இந்த திருமண எம்பிராய்டரி நிறைய பேர் இந்தியா முழுக்க செய்துட்டு இருக்காங்க. இதில் என்னுடைய ஸ்பெஷல் ஹேர் ஸ்டைல்தான். பொண்ணுக்கு என்ன தலை அலங்காரம் செய்கிறார்களோ அதை அப்படியே என்னுடைய எம்பிராய்டரியில் கொண்டு வந்து விடுவேன். இல்லையேல் கூடுமானவரை அதை மேட்ச் செய்ய முயற்சி செய்வேன். அதேபோல் மணப்பெண் மணமகளின் உடைகள் இதுதான் அப்படின்னு எனக்கு போட்டோ அனுப்பினால் ஓரளவு அந்த உடைகளை மேட்ச் செய்து ஜோடிகளுக்கான உடைகளையும் தயார் செய்திடலாம்” உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்றதும் விளக்கமாக பேசத் தொடங்கினார் மஞ்சுளா.
‘‘எனக்கு சொந்த ஊர் கடப்பா, ஆந்திரபிரதேசம். நான் பிறந்தது பெங்களூரு, ஹை ஸ்கூல் மற்றும் கல்லூரி படிப்பு கூட பெங்களூருவில் தான் முடிச்சேன். இன்ஜினியரிங் படிச்சிட்டு ஒரு தனியார் கம்பெனியிலும் வேலை செய்தேன். ஆனால் அது எனக்கு பிடிச்ச வேலையாக இல்லை. ஏதோ ஒரு மெஷின் மாதிரி வேலை செய்கிற உணர்வு. அதனால் அந்த வேலையை விட்டுட்டேன். வேலையை விட்டுவிட்டு ஒரே மாதத்தில் இந்த எம்ப்ராய்டரி எனக்கு பழக்கமானது. அப்பா கவர்மெண்ட் பணியாளர். பொதுவா எனக்கு இந்த ஆர்ட் அண்ட் கிராப்ட் வேலைகள் செய்ய ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு முறை இணையத்தில் ஸ்க்ரோல் செய்துட்டு இருந்தபோதுதான் இந்த கல்யாண எம்பிராய்டரி டிசைன்ஸ் கண்ணில் பட்டது. தொடர்ந்து ஆன்லைன் வழியாகவே அதை பொறுமையா கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் சிம்பிள் டிசைனாகத்தான் செய்ய தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுக்க இப்போ கிராண்டான டிசைன் கூட அதிகமாக மூன்று நாட்களில் முடிச்சுடுறேன்.'' இந்த எம்பிராய்டரி அன்பளிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது? மேலும் தொடர்ந்தார் மஞ்சுளா.
‘‘எனக்கு இது முற்றிலும் புதுசு. மேலும் ஆர்ட்- கிராஃப்ட் செய்யப் பிடிக்கும் ஆனால் செய்ததில்லை. அப்படியான ஜீரோ அறிவுடன்தான் பயிற்சி எடுத்துக்கிட்டேன். இதை முதலில் பிசினஸ் ஆக செய்யணும் எனும் எண்ணம் கூட எனக்கு கிடையாது. சும்மா வீட்டில் இருக்கும் பொழுது எனக்கு பொழுது போகணும் என்கிறதுக்காக கத்துக்கிட்டு செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய இன்ஸ்டா பக்கத்திலேயேயும் பதிவிட ஆரம்பிச்சேன். அதற்கு ஒரு பெயர் வேணும் என்கிறதுக்காக ஹூப் அண்ட் லூப் என்கிற இன்ஸ்டா அக்கவுண்ட் பெயரில்தான் ஆரம்பிச்சேன். அதைத்தான் இன்ஸ்டா எடுத்துகிச்சு. தொடர்ந்து அப்பா அம்மாவுடைய திருமண நாளுக்காக முதன் முதலில் ஒரு எம்பிராய்டரி செய்தேன். எல்லாரும் பாராட்டினாங்க. எல்லாருமே இதை பிசினஸ் ஆக செய்யறதையும் பார்க்க முடிந்தது ஏன் நாம் செய்யக்கூடாது அப்படின்னு உண்டான ஐடியா தான் இப்போ ஹூப் அண்ட் லூப் பிசினசாக மாறியிருக்கு. எனக்கு இன்டர்நேஷனல் அளவில் ஆர்டர்கள் வருது. அதிலும் அமெரிக்கா, நியூயார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இப்படி பல நாடுகளிலிருந்தும் எனக்கு ஆர்டர்ஸ் வருது. இதில் ஆச்சரியம் என்னன்னா இந்தியர்களே இல்லாத நிறைய பேர் என்கிட்ட எம்ராய்டரி அன்பளிப்புகள் செய்து வாங்கிக்கிறாங்க. மேலும் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கூட நிறைய ஆர்டர்கள் வருது. குறிப்பா தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் இந்த கல்யாண அன்பளிப்பு செய்து வாங்கிக்கிறாங்க” எத்தனையோ கைவினைப் பொருட்கள் இருக்க ஏன் இந்த எம்ப்ராய்டரி அலங்காரம் மீது ஆர்வம் உண்டானது. தொடர்ந்தார் மஞ்சுளா.
‘‘நல்லா யோசிச்சு பாருங்க நம்ம எல்லாருமே இந்த பொம்மைக்கு டிரஸ் மாட்டி விடுவது, புடவை கட்டி விடுவது அதற்கு அலங்காரம் செய்கிறது இப்படி சின்ன வயதில் விளையாடி இருப்போம். நான் நிறையவே விளையாடி இருக்கேன், அதனுடைய தாக்கம் தான் இந்த மண மகன் - மணமகள் ஹேங்கிங். வெறும் ஆர்ட் & கிராஃப்டாக இல்லாம, என்னுடைய சின்ன வயது ஞாபகங்களை எனக்குக் காட்டுகிற ஒரு பயிற்சியாகவும் இந்த எம்பிராய்டரி எனக்குத் தோணுச்சு. ஒரு சிலர் ஒரு மாதத்திற்கு முன்பே முகூர்த்த புடவை, திருமண உடைகள் எடுத்திடுவாங்க. அதை புகைப்படம் எடுத்து அனுப்பி அது போல உடையணிந்த மணமக்கள் வேணும்ன்னு கேட்பாங்க. ஒரு சிலர் எனக்கு அதனுடைய சாம்பிள் மெட்டீரியலை அனுப்பி வெச்சிடுவாங்க. அதை வைத்து நான் இன்னும் கொஞ்சம் மெட்டீரியல்கள் எல்லாம் சேகரித்து இந்த கிப்டை தயார் செய்திடுவேன். துவக்கத்தில் ரூ. 800 என்கிற விலையில் தான் இந்த எம்ராய்டரி கிஃப்ட்களை விற்பனை செய்தேன். இப்போ ஆரம்ப விலை ரூ. 2000 துவங்கி, ரூ. 15000 வரையிலும் கூட விற்பனை ஆகுது. திருமணத்திற்கு மட்டுமில்லாமல், பிறந்த நாள், பட்ட மளிப்பு விழா, கிரகப்பிரவேசம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு இப்படி நிறைய விழாக்களுக்கு வாங்கறாங்க. ஒருசிலர் ரிட்டர்ன் கிஃப்ட்களா கூட வாங்கிக்கறாங்க. பெரும்பாலும் கிறிஸ்டியன் திருமணங்களுக்கு மெட்டீரியல் தேடறது சுலபமா தான் இருக்கும். அதிலும் புடவை என்றால் அதற்கான பொருட்களை சேகரிக்க கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நானே விற்பனை, இன்ஸ்டா எடிட்டிங், பொருட்கள் வாங்க அலைவது இப்படி எல்லாமே ஒன் வுமன் ஆர்மிதான். இதுதான் குழப்பம் இல்லாமல் இருக்கு. இதை இன்னும் ஆன்லைன் வகுப்புகளாகவும் மற்றப் பெண்களுக்கு எடுக்கணும் என்கிற ஆர்வமும் இருக்கு. விரைவில் அதையும் ஆரம்பிப்பேன்” தன்னம்பிக்கையாக சொல்கிறார் மஞ்சுளா.
- ஷாலினி நியூட்டன்
