தமிழகத்தில், கூட்டுறவு வங்கிகளில் குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின்படி, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலும், சிறு விவசாயிகளுக்கு ரூ.25,000 வரையிலும் பயிர்கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடன் தள்ளுபடி 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரையிலான காலக்கட்டத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன்மூலம் சுமார் 14 லட்சத்து 22 ஆயிரத்து 555 விவசாயிகள் பயனடைவார்கள்.
அதாவது, கூட்டுறவு வங்கிகளில், ரூ.50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே 100 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். நடுத்தர மற்றும் பெரும் விவசாயிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்ைல. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 கடன் தள்ளுபடி கிடைக்கும். தமிழக அரசின் இந்த அறிவிப்பால், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த கடன் தள்ளுபடி பெரும் ஏமாற்றம் தந்துள்ளதாக காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு விவசாயி, அந்நிலத்தில் எதை பயிரிட்டாலும் குறைந்தபட்சம் முதலீடு ரூ.1லட்சம் தேவை. அந்த அளவுக்கு விவசாய கூலி மற்றும் விதை, உரம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உள்ளது. விவசாயிகளின் நிலைமை இவ்வாறு இருக்க, விவசாயிகளின் வேதனையை புரிந்துகொள்ளாமல், ரூ.5 ஆயிரம் பயிர்கடன் தள்ளுபடி என்பது முற்றிலும் கண்துடைப்பு என்கிறார்கள், விவசாயிகள்.
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சியில், தமிழக அரசு தள்ளுபடி செய்த பயிர்கடன் தொகை ரூ.12,110 கோடி. தற்போது தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ள பயிர்கடன் தொகை ரூ.2,044 கோடி. இது, யானை பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது. கடந்த திமுக ஆட்சியுடன் ஒப்பிடும்போது, இந்த பயிர்கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய மோசடியாக உள்ளது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
சுமார் ரூ.1.50 லட்சம் பயிர்கடன் பெற்ற விவசாயிக்கு வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் தள்ளுபடி என்பது முற்றிலும் ஏமாற்று வேலை. தமிழக அரசின் இந்த நடவடிக்கை, விவசாயிகளின் சுமையை குறைப்பதாக இல்லை. மாறாக, அவர்களது முதுகில் குத்தும் செயலாகவே உள்ளது என விவசாயிகள், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கூட்டுறவு கடன் தள்ளுபடி தொடர்பாக விஜய் அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பி வாக்களித்த விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகத்தை செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் விவசாயிகள், வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுவார், விவசாயிகளை எங்கோ கொண்டுபோய் விடுவார் என பரப்புரை செய்யப்பட்டது.
ஆனால், இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. விவசாயிகளின் வியர்வையால் தான் மனிதகுலம் வாழ்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. உழவன் சேற்றில் கை வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பரவலாக நாம் அறிந்த பழமொழி. ஆனால் விஜய் தலைமையிலான அரசு இதை உணர்ந்து, செயல்படுவதாக தெரியவில்லை என்பது தெளிவாகி உள்ளது.


