சிவகிரி வட்டாரத்தில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை வனத்திற்குள் விரட்ட தனிப்பாதை: அதிகாரிகள் நேரடி ஆய்வு
சிவகிரி: தென்காசி மாவட்டம், சிவகிரி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள யானைகள் விளைநிலங்களில் புகுந்து கரும்பு, வாழை, நெல் பயிர்களையும், தென்னை, கொய்யா, மாமரக்கன்றுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுவரை சுமார் 500 ஏக்கர் வரை பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த வாரம் சிவகிரி வன அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர். அதன்பேரில் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள வழிவழிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் போக்கு காட்டி வந்தது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்க முன்பு ராசிங்கபேரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரிலும் யானை கூட்டம் கடந்து வந்து விளைநிலங்களுக்குள் புகுந்து கரும்பு, தென்னை, வாழை, கொய்யா, மாமரங்கள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் கடந்த 26ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, யானை நண்பர்கள் குழு மூலம் யானைகளை விரட்டுவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட விளைபொருளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தென்காசி மாவட்ட உதவி வன பாதுகாப்பு அலுவலர் நெல்லை நாயகம் உறுதியளித்தார்.
தொடர்ந்து, வழிவழிக்குளம், ராசிங்கப்பேரி, சின்ன ஆவுடைபேரி, பெரிய ஆவுடைப்பேரி, விஜயரங்கப்பேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று டிரோன் கேமராக்கள் மூலம் யானைகள் இருக்கும் பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக யானைகளை வனத்திற்குள் விரட்டியடிக்கவும், வனத்துறையினர் விவசாயிகள், நீர்வளத்துறையினர் உள்ளிட்டோர் எளிதில் செல்லும் வகையில் வாகனங்கள் செல்வதற்கு வசதியாகவும் பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்பேரில் நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் லட்சுமணன், வனச்சரகர் கதிரவன்,வன காவலர்கள் மாரியப்பன், ஆனந்த் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் சின்ன ஆவுடைப்பேரி, பெரிய ஆவுடைப்பேரி, விஜயரங்கப்பேரி, வழிவழிகுளம், மற்றும் ராசிங்கப்பேரி, கோம்பையாறு மற்றும் 16 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக கருத்துரு அரசுக்கு அனுப்பிவைத்த பிறகு பாதை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

