சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சரக்கு வேனை காட்டு யானை வழிமறித்து தும்பிக்கையால் தக்காளி பழங்களை எடுத்து சாலையில் சிதறவிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் மற்றும் காய்கறி பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை காட்டு யானைகள் அடிக்கடி வழிமறித்து கரும்பு மற்றும் காய்கறிகளை ருசித்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிய சரக்கு வேன் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் வனப்பகுதி வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆசனூர் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே ஒரு காட்டு யானை இந்த வேனை வழிமறித்தது. யானையை கண்ட ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து யானை தனது தும்பிக்கையால் சரக்கு வாகனத்தில் பாரம் ஏற்றப்பட்டுள்ள தக்காளி பெட்டியை எடுத்து சாலையில் தள்ளியதில் ஒரு பெட்டி தக்காளி பழங்கள் முழுவதும் கீழே விழுந்து சாலையில் சிதறியது.
பின்னர் தக்காளிகளை ருசித்து சாப்பிட ஆரம்பித்தது. அப்போது சரக்கு வாகன ஓட்டுனர் சமயோசிதமாக செயல்பட்டு வாகனத்தை மெதுவாக நகர்த்தி யானையிடமிருந்து தப்பினார். காட்டு யானை வேனை வழிமறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
