சென்னை: கனமழை பெய்தாலும் சீரான மின் விநியோகம் இருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் விபத்துகள் தவிர்க்கப்பட்டது என்றும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் அதிகளவு மழைநீர் தேங்கிய இடங்களை ஒரு சில இடங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் ஒரு சில இடங்களில் மின் விபத்து ஏற்பட்டது. தியாகராய நகர் மற்றும் நுங்கம்பாக்கத்தில் மின்பெட்டி வெடித்து விபத்துகள் நிகழ்ந்தன. ஆனாலும் உயிரிழப்பு ஏதுமில்லாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின் பெட்டியில் உள்ள மின்கம்பி இணைப்புகளில் மழைநீர் புகுந்ததால் விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் பணியாளர்கள் அதனை சரி செய்தனர். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயபுரம், ஆவடி, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. சென்னை நகரில் 20 மின் மாற்றிகள் மட்டுமே மழைநீர் தேக்கம் காரணமாக முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதுவும் மழைநீர் வடிந்ததும் மின்சாரம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மின்னகம் சேவை மையத்தில் வழக்கமாக 2400 அழைப்புகள் பெறப்படும் நிலையில், கூடுதலாக 200 அழைப்புகள் பெறப்பட்டன. மேலும் கூடுதலாக 10 பணியாளர்களை பணியில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


