சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் மையம் அமைக்கும் பணி தீவிரம்: பசுமை எரிசக்தி கழகம் தகவல்: கடற்கரை-பூங்கா உள்ளிட்ட இடங்களில் நிறுவ திட்டம்
சென்னை: மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் சென்னையில் 9 இடங்களில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் மின் வாகனங்களுக்கு தடையின்றி சார்ஜிங் வசதி கிடைக்க தேசிய நெடுஞ்சாலையில், 25 கி.மீ தூரத்துக்கு ஒன்றும், மாநகரங்களில் 3 கி.மீ தூரத்துக்கு ஒன்றும் என சார்ஜிங் மையங்களை அமைக்க பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில், ரயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 500 சார்ஜிங் மையங்களை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் அமைக்க உள்ளது. இதில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி மற்றும் பசுமை எரிசக்தி கழகம் இணைந்து அதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்து டெண்டரை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, சென்னையில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை, செம்மொழி பூங்கா உள்பட ஒன்பது இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு, கடந்த ஆகஸ்டில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற நிறுவனங்களில் ரிலக்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம் தேர்வானது.
தற்போது அந்த நிறுவனம் மூலம் சார்ஜிங் மையம் அமைத்து பராமரிப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் மூலம் மையங்கள் அமைக்கப்பட்டு இதில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை அந்நிறுவனம், மாநகராட்சி, பசுமை எரிசக்தி கழகம் ஆகியவை பகிர்ந்து கொள்ளும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.