தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வரும் வின்பாஸ்ட் நிறுவனம், இந்தியச் சந்தைக்கென பிரத்யேகமாக 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈவோ, பெர்லிஸ் மற்றும் வைப்பர் ஆகிய ஸ்கூட்டர்களைத் தான் சந்தைப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் இடம் பிடிக்க இந்த நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே புதிய ஸ்கூட்டர்கள் வர உள்ளன.
இந்த மூன்று ஸ்கூட்டர்களின் உதிரி பாகங்களும் வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளதாகவும் பின்னர் இங்கேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
மூன்று ஸ்கூட்டர்களிலுமே லித்தியம் அயர்ன் பாஸ்பேட் பேட்டரி இடம் பெற்றிருக்கும். ஈவோ ஸ்கூட்டரில் 2.4 கிலோவாட் அவர் கொண்ட 2 பேட்டரிகள், 2.25 கிலோவாட் பவரை வெளிப்படுத்தும் ஹப் மோட்டார்கள் இடம் பெற்றிருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
பெர்லிஸ் ஸ்கூட்டரில் 3 கிலோ வாட் அவர் பேட்டரி இடம் பெற்றிருக்கும். 2.8 கிலோவாட் பவரை வெளிப்படுத்தும். வைப்பரில் 4.8 கிலோவாட் பேட்டரி இடம் பெற்றிருக்கும். இதிலுள்ள மோட்டார் 3 கிலோவாட் பவரை வெளிப்படுத்தும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


