Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் அலப்பறை

நாட்டில் 5 மாநில தேர்தலுடன் சேர்த்து கர்நாடகாவில் காலியாக இருக்கும் இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. பாகல்கோட் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மேட்டி உயிரிழந்ததால் அத்தொகுதி காலியாக உள்ளது. அதே போல் தாவணகெரே தெற்கு தொகுதியில் எம்எல்ஏ ஷாமனூர் சிவசங்கரப்பா உயிரிழந்ததால் காலியாக உள்ளது. ஏப்.9ம் தேதி இந்த இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

இரு தொகுதிகளிலும் பாஜ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். ஆனால் காங்கிரசில் தான் குழப்பம், இழுபறி என்று பரபரப்பு ஏற்பட்டது. பாகல்கோட் தொகுதியில் மறைந்த மேட்டி குடும்பத்தினருக்குள்ளேயே யார் தேர்தலில் போட்டியிடுவது என்ற சர்ச்சை எழுந்தது. இதையடுத்து மேட்டி குடும்பத்தினரை பெங்களூரு விதானசவுதாவுக்கு அழைத்த முதல்வர் சித்தராமையா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் யாருக்கு சீட் கிடைத்தாலும் அவருக்காக குடும்பத்தினர் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து மேட்டியின் இளைய மகன் உமேஷ் மேட்டியை காங்கிரஸ் வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்தது. இதே போல் தாவணகெரே தெற்கு தொகுதியில் ஷாமனூர் சிவசங்கரப்பாவுக்கு அனைத்து மதத்தினரும் ஆதரவு அளித்தனர். அதனால் அவர் அசைக்கமுடியாத காங்கிரஸ் வேட்பாளராக இருந்து வந்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் முஸ்லீம் சமூகத்தினர் தேர்தலில் தங்கள் சமூகத்தை சேர்ந்தவருக்கு சீட் வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். இதனால் அந்த தொகுதியில் குழப்பம் ஏற்பட்டது.

கட்சி தலைமை வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே ஷாமனூர் சிவசங்கரப்பாவின் பேரனும், அமைச்சர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் மகனுமான சமர்த் வேட்புமனுவை தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் மாவட்ட தலைவரும், சிறுபான்மையின வகுப்பை சேர்ந்தவருமான சாதிக் போட்டி மனு தாக்கல் செய்தார். முஸ்லிம் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஜமீர் அகமது கான் அறிவித்ததால் மேலிட ெபாறுப்பாளர் ரனதீப் சுர்ஜேவாலா பதட்டமடைந்தார்.

இதையடுத்து தனது நம்பிக்கைக்குரிய ஜமீர் அகமது கானை முதல்வர் சித்தராமையா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டார். இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் மறைந்த எம்எல்ஏ ஷாமனூர் சிவசங்கரப்பாவின் பேரன் சமர்த்தை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தது. ஆனால் தாவணகெரே தெற்கு தொகுதியில் சிறுபான்மையின சமூகத்தினர் கடும் அதிருப்தியில் இருப்பதால் தேர்தல் பணியில் ஈடுபடாமல் புறக்கணிக்கப்போவதாக தெரியவந்துள்ளது.

மேலும் தாவணகெரே மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் நிர்வாகிகள் 18க்கும் மேற்பட்டோர் பாஜவில் இணைந்ததால் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வெற்றியை அறுவடை செய்ய பாஜ கட்சியினர் சிறுபான்மையின தலைவர்களை அழைத்து அவர்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதாக பேசி வருகின்றனர்.

கொஞ்சம் இடைவெளி கிடைத்தால் ஆழமாக உள்ளே புகுந்துவிடும் பாஜவினரின் சர்க்கரை பேச்சில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிறுபான்மையினர் வீழ்ந்துவிடக்கூடாது எ்ன்பதே காங்கிரஸ் தலைவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. ஆனால் ஷாமனூர் சிவசங்கரப்பாவின் செல்வாக்கு அவரது பேரனுக்கு வெற்றியை தரும் என்று அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.