Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தேர்தல் வாக்குறுதிகள் பற்றி எதுவுமே இல்லை தவெக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும் இல்லை: பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஏமாற்றம்: பூஜ்ய பட்ஜெட் என தலைவர்கள் விமர்சனம்

சென்னை: தேர்தலில் வெற்றி பெற்றபிறகு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு நேற்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் பெண்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கான எந்த அறிவிப்புகளையும், சலுகைகளையும் வழங்கவில்லை. இதனால், அவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளும், தொலைநோக்கு திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தவெக அரசு பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று 2026-27ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

முதல்வர் விஜய் முதல்வரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், தமிழக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக பெண்களுக்கு திமுக அரசு சுமார் 1.3 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கி வந்தது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தவெக ஆட்சிக்கு வந்தால் ரூ.2,500 வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார்.

மேலும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000, ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர், சாதிவாரி கணக்கீடு, தமிழர் நாகரீக அருங்காட்சியகம், மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.25,0000, வீடு தேடி ரேசன் பொருட்கள், முதியோர் தொகை ரூ.3000, மாற்றுதிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000, தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30,000, பழைய ஓய்வூதிய திட்டம், தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம், காவலர் சலவைப்படி ரூ.1000,

காவலர் ஊதியம் ரூ.25,000, தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.4000, வழக்கறிஞர் நல நிதி ரூ.3,000, உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7,000, பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து, அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா மகளிர் பயணம், பெண்களுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றம், கர்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உதவித்தொகை ரூ.25,000, விலையில்லா சானிடரி நாப்கின், 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.2500, மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன்,

வெற்றித் தொழிற் பயிற்சி திட்டம், வெற்றி விவசாய உரிமைத் தொகை ரூ.15,000, மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.20,000, மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதி ரூ.8,000, அனைத்து குடும்பங்களுக்குமான ரூ.25 லட்சம் காப்பீடு, அரசு மருத்துவமனையில் குறைந்த விலை மருந்துகள், மாதம் ஒரு முறை மின்சார கட்டண கணக்கீடு, 150 நாள் ஊரக வேலை உறுதித்திட்டம், சொத்து வரி குறைப்பு, ஐந்து சிறப்புத்திட்ட நிதிநிலை அறிக்கை என்று ஏராளமான அறிவிப்புகளை விஜய் அறிவித்திருந்தார்.

சொன்னதை எல்லாம் செய்வோம் என்று தொடர்ந்து முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பேசி வருவதால், முதலில் கையெழுத்துப் போடப்படும் என்று சொன்னவர்கள், அப்போது அறிவிக்காததால், இந்த பட்ஜெட்டில் கண்டிப்பாக புதிய அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்ட தொடரில் கலந்துகொள்ள காலை 9.30 மணி முதல் எம்எல்ஏக்கள் வர தொடங்கினர். தலைமை செயலகத்துக்கு முதல்வர் விஜய் காலை 9.30 மணிக்கு வந்தார்.

அவரை நிதி அமைச்சர் மரியவில்சன் சந்தித்து வாழ்த்து பெற்றார். காலை 9.57 மணிக்கு முதல்வர் விஜய் பேரவைக்கு வந்தார். அவர் வந்தபோது, ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எழுந்து நின்று வரவேற்றனர். செங்கோட்டையின் மேஜையை தட்டும்படி சைகை காட்டினார். அதன்பின்னர் அனைத்து தவெக எம்எல்ஏக்களும் மேஜையை தட்டி வரவேற்றனர். சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அப்போது திமுகவினர் மேஜையை தட்டி வரவேற்றனர். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.

அவரை அதிமுகவினர் வரவேற்றனர். சரியாக 10 மணிக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வந்தார். சபாநாயகர் திருக்குறள் வாசித்து பேரவை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். 10.01 மணிக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது அறிவிப்பில் புதிய அறிவிப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் ஏராளமான திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, புதிய பெயரில் அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு, துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்த்த எந்த புதிய திட்டங்களையும் அவர் அறிவிக்கவில்லை. ஆனால், மக்களுக்காக பல சூழ்ச்சிகளை வென்ற ‘ஜனநாயகன்’ என்று விஜய் கடைசியாக நடித்து சுமாராக ஓடிய படத்தை குறிப்பிட்டு பேசினார். மேலும் வளர்ச்சி, சமூக நீதி, சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு, ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படைத்தன்மையான அரசு என கடந்த 3 மாதமாக சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து வருவதாக புகழ்ந்து பேசினார்.

500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்துகிறவர்களுக்கு 200 யூனிட் மின்சார் இலவசம், சிங்கப்பெண் திட்டம், 717 மதுபான கடைகள் மூடல் என பல நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தேசிய அளவில் பல சமூக-பொருளாதார குறியீடுகளில், முன்னணியில் விளங்கும் மாநிலமாக, பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், தமிழ்நாட்டை வறுமை இல்லாத, செழுமை மிகுந்த அனைவருக்கும் சமவாய்ப்பினை வழங்கி, அதன்மூலம் சமூக நீதியை நிலைநாட்டும் மாநிலமாகவும், 2036ம் ஆண்டிற்குள், 1.5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த தேவையான சமூக-பொருளாதார மற்றும் மனித வள முதலீடுகளை மேற்கொள்வதற்கு அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவித்தார்.

நிதி ஆதாரங்களை பெருக்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்பு கட்டணத்தை அரசு அண்மையில் விதித்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். மேலும் சரக்கு, சேவை வரி மற்றும் பத்திரப்பதிவு, சுரங்கம் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் பள்ளிகளில் சூப்பர் கிளீன் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

2026-27ம் ஆண்டுகளில் 11ம் வகுப்பு பயிலும், 5.32 லட்சம் மாணவர்களுக்கு, ரூ.277 கோடி செலவில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதியுடன் பிராண்டட் மதி வண்டிகள் வழங்கப்படும். பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.44,527 கோடி வழங்கப்படும். ரூ.10 கோடி ஆரம்ப மூலதனத்துடன் தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி, மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம் அமைக்கப்படும். இதன்மூலம் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 200 மாணவர் விடுதிகள் கட்டப்படும். உயர்கல்வி துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சமூக நீதித்துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,485 கோடி ஒதுக்கீடு, போக்குவரத்து துறைக்கு ரூ.13,561 கோடி, நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.29,863 கோடி, எரி சக்தித்துறைக்கு ரூ.15,828 கோடி, நீர்வளத்துறைக்கு ரூ.9264 கோடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.11,531 கோடி, காவிரி, கொள்ளிடம் குறுக்கே தடுப்பணைகள், காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று வழக்கம்போல, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை அறிவித்தார்.

புதிய அறிவிப்புக்கள், மக்கள் விரும்பிய அறிவிப்புகள் குறிப்பாக தேர்தலில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எதையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பெண்கள் பெரிதும் எதிர்பார்த்த மாதம் ரூ.2,500 திட்டம் எப்படியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வருவாயை பெருக்கவும், புதிய திட்டங்களை தொடங்கவும், தொலைநோக்கு திட்டங்கள், தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் இல்லாத வெற்று அறிவிப்புகள்தான் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது, இது பூஜ்ய பட்ஜெட் என எதிர்க்கட்சிக்கள் கருத்து தெரிவித்துள்ளன.

* வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடி

செலவினங்களை பொறுத்தவரை மொத்த வருவாய் செலவினம் இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் 2026-27ல் இருந்த ரூ.3,93,272 கோடியில் இருந்து திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் 2026-27ல் ரூ.4,05,802 கோடியாக உயர்த்தி மதிப்பிடப்பட்டுள்ளது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களான விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, 200 யூனிட் இலவச மின்சாரம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஆகியவற்றுக்கான கட்டாய ஒதுக்கீடுகள் அதிகரித்ததால் மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்கள் உயர்ந்துள்ளன.

2026-27ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.59,562 கோடியாக கணிக்கப்பட்ட ஒட்டுமொத்த மூலதனச் செலவினம் திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் 2026-27ல் ரூ.56,985 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிகர கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளிட்ட மாநிலத்தின் மொத்த மூலதன ஒதுக்கீடு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் ரூ.66,060 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.48,696 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. வருவாய் வரவுகளை மிகையாக மதிப்பிட்டதன் மூலமும், வருவாய் செலவினத்தை குறைவாக மதிப்பிட்டதன் மூலமும், இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* செலவு சதவீதம்

கடன்கள் திருப்பி செலுத்துதல் 9.9%

அரசு ஊழியர் சம்பளம் 17.3%

ஓய்வூதியம், ஓய்வுகால பயன்கள் 8.0%

கடன் வழங்குதல் 1.9%

உதவித்தொகை, மானியங்கள் 33.2%

வட்டி செலவுகள் 15.0%

மூலதனச்செலவு 10.9%

செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகள் 3.8%

* பள்ளிக்கல்வி, உயர்கல்வி துறைக்கு நிதி குறைப்பு

பள்ளிக்கல்வி துறைக்கு கடந்த திமுக ஆட்சியில் 2025-26ம் நிதியாண்டில் ரூ.46,767, 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ரூ.48,534 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், நேற்று தவெக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ரூ.44,527 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025-26ம் நிதியாண்டை ஒப்பிடுகையில் ரூ.2,240 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறைக்கு 2025-26ல் ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போதைய தவெக அரசின் பட்ஜெட்டில் ரூ.8,393 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி குறைப்பு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.