Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் பறக்கும் படை சோதனை: மதுராந்தகம் தொகுதியில் 47 லட்சம் ரூபாய் பறிமுதல்

செய்யூர்: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 47 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற (தனி) தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்களை வழங்கப்படுகிறதா என்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

மதுராந்தகம் அடுத்த ராமாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்தவாசியில் இருந்து சென்னை நோக்கி வந்த காரில் சோதனை நடத்தியபோது 31 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவ்வழியா வந்த மற்றொரு காரில் 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்குரிய ஆவணங்கள் கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு காரில் கொண்டுவரப்பட்ட 2 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். சோத்துப்பாக்கம் அருகே தனியார் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த 13 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். இவ்வாறாக பறிமுதல் செய்யப்பட்ட 47 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.