தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜ மாற்றி விட்டது: முதல்வர் குற்றச்சாட்டு
சென்னை: தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜ மாற்றிவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தை பாஜ தனது தேர்தல் தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூருவின் மகாதேவபுரா தொகுதியில் நடந்தது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல, மக்கள் அளித்த தீர்ப்பை திருடுவதற்கான திட்டமிட்ட சதி. எனது சகோதரரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்கு திருட்டு ஆதாரங்கள் எந்த அளவுக்கு இந்த முறைகேடு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி தலைமையில், இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்கிறார். இந்நிலையில், பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும். அரசியல் நோக்கத்தோடு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது நிறுத்தப்பட வேண்டும். மற்றும் நமது மக்களாட்சியை அழிக்கும் செயலான இந்த வாக்கு திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த போராட்டத்தில் திமுக உறுதியாக உடன் நிற்கிறது. இந்திய மக்களாட்சியை பட்டப்பகலில் பாஜ திருடிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.