‘எஸ்ஐஆர்’ குறித்து பிஎல்ஓக்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கவில்லை: தேர்தல் ஆணையம் மீது பாஜ எம்எல்ஏ குற்றச்சாட்டு
கோவை: கோவை புலியகுளம் பகுதியில் பாஜ தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ.வுமான வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்) நடந்து வரும் நிலையில், நிறைய இடங்களில் பூத் லெவல் ஆபீசர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கவில்லை. அவர்கள் வீடுதோறும் சென்று விண்ணப்ப படிவம் வழங்குவதில்லை. ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, மக்களை வாங்க.. வாங்க... என அழைக்கிறார்கள். விண்ணப்ப படிவம் யார் கேட்டாலும் கொடுக்கிறார்கள். ஒரு டிக் மட்டும் பண்ணுகிறார்கள். முறையாக ஆய்வுசெய்து, விண்ணப்ப படிவத்தை அதற்குரிய வெப்சைட்டில் ஸ்கேன் செய்வது இல்லை. பாகம் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் என எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கிறதா? என சோதிப்பது இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்திய தேர்தல் ஆணையம், எஸ்.ஐ.ஆர். குறித்து, அந்தந்த பூத் லெவல் ஆபீசர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவில்லை என்பதை பாஜ எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஒப்புக்கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த குற்றச்சாட்டைதான், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
