Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேர்தல் அறிக்கை கருத்துக்கேட்க சென்ற இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகள் முணுமுணுப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஏதோ பத்திர முறைகேடு பீதியில் அதிகாரிகள், இடைதரர்களும் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

கடல் ஊரில் பழுப்பு நிலக்கரி பற்றாக்குறையால் சுரங்கம் விரிவாக்க பணிக்காக புரம் ஊராட்சியில் வீடு, நிலங்களை கையகப்படுத்த பொது அறிவிப்பாணை வெளியானதாம்.. இதனால் 2011 முதல் எந்த பத்திரப்பதிவும் நடக்கவில்லையாம்.. ஆனால் குறிப்பிட்ட சர்வே எண்களுக்கு மட்டும் உள்ளூர், வெளியூர் நபர்களிடம் ‘ப’ விட்டமின் வாங்கி முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாம்.. இந்த முறைகேடும் சில அதிகாரிகளின் துணையோடு நடக்கிறதாம்.. இதை கண்டித்து வேல் கட்சியினருடன் முக்கிய நபர்கள், கிராமவாசிகளுடன் கைகோர்த்து சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறார்களாம்.. இது ஒருபுறமிருக்க, கடந்த 11 மாதத்தில் முறைகேடாக பதிவான பத்திரங்களை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தை நாட, இவ்விவகாரம் அதிகாரிகள் மட்டத்தில் பீதியை கிளப்பி இருக்கிறதாம்.. இவ்விஷயத்தில் இடைத்தரகர்களும் கலக்கத்தில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பண்டிகைகளை அரசியல் களமாக்கி விட்டதால யூனியன்வாசிகளும் தேர்தல் பரிசு மழையில் நனைகிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அரசியல் கூத்துகள் அசால்ட்டாக அரங்கேறும் தென் மாநில யூனியனில் தேர்தல் வாசனை வீசுகிறதாம்.. இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால் பொங்கல் ஜாக்பாட் அடித்துள்ளதாம்.. ஒருபுறம் அரசு 5 பொருட்கள் கொண்ட பரிசு தொகுப்பை அறிவிக்க, தொகுதி வாரியாக களமிறங்க முடிவெடுத்துள்ள அரசியல் பிரபலங்களும் பொங்கல் பரிசு பொருட்களை கொடுத்து வருகிறார்களாம்.. கரும்புகளுடன் சில்வர் பானை, பச்சரிசி உள்ளிட்டவற்றை வழங்குவதோடு ஒருபடி மேலே சென்று கிரைண்டர், மிக்சி, தவா, டிபன் செட், அண்டா, குண்டா, குக்கர், ஹாட்பாக்ஸ் என பலவிதமான பரிசு பொருட்களையும் போட்டிப் போட்டு வழங்குகிறார்களாம்.. குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஒரே கட்சியில் இருவர், ஒரே கூட்டணியில் நால்வர் தொகுதியை பிடிக்க போட்டிப்போட்டு தாராளம் காட்டுவதால் பரிசு மழையில் நனைந்து குஷியில் உள்ளார்களாம்.. மக்களை தன்பக்கம் இழுக்க பண்டிகைகளை அரசியல்வாதிகள் ஒரு களமாக்கி விட்டார்களே... என்ற முணுமுணுப்பை யூனியன்வாசிகளிடம் கேட்க முடிகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி கருத்துகேட்பில் எதிர்பார்த்த அளவில் கூட்டம் இல்லாததால் தொடர்ந்து அப்செட்டில் இருக்காங்களாமே நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி இலை கட்சி சார்பில் கருத்துக்கேட்க தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நெற்களஞ்சியம் மாநகரில் நடந்ததாம்.. இதில், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 2வது வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாம்.. ஆனால், எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லையாம்.. இதனால் முக்கிய நிர்வாகிகள் கடும் அப்செட் அடைந்து விட்டார்களாம்... கருத்துக்கேட்பு கூட்டத்திற்கே கூட்டம் வரவில்லை என்றால், நாம் எந்த அளவுக்கு இருக்கிறோம் என முக்கிய நிர்வாகிகளுக்குள் முணுமுணுத்தாங்களாம்.. எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராதது குறித்து தலைமையிடத்தில் தெரிவிக்க அவங்க முடிவு செய்திருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மேங்கோ பார்ட்டிக்கு அணையான தொகுதியில சீட்டு உண்டா, இல்லையா என தொண்டர்கள் புலம்ப தொடங்கிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டுல சட்டமன்ற தேர்தல் களம் இப்பவே அதகளமாகி வருது.. இந்த அதகளத்துல, திராவிட பார்ட்டிகள் கூட்டணி இறுதிவடிவம் செய்றதுல தீவிரம் காட்டி வர்றாங்க.. ஆனா நடிகரோட பார்ட்டி கூட்டு அணி ஆட்சின்னு சொல்லிட்டு, கூட்டணிய இறுதி செய்ய முடியாம டீல்ல விட்டு வெச்சிருக்காங்களாம்.. இதுல மேங்கோ பார்ட்டிகள் பாதர், சன் பிரச்னையால ரொம்பவே ரணகளத்துல இருக்குறாங்களாம்.. சமீபத்துல மேங்கோ பார்ட்டி (அ) டீம், சேலத்துக்காரரை சந்திச்சு கூட்டு அணி முடிவு செஞ்சிட்டாங்க.. சொல்லி 2 நாள்ல மேங்கோ பார்ட்டி (அ) அணியோட தொகுதி பட்டியல்னு வெளிய பரவி பரப்பை ஏற்படுத்தி இருக்குது.. அந்த பட்டியல்ல வெயிலூர் மாவட்டத்துல இருக்குற அணையே இல்லாத தொகுதி பெயர் இல்லையாம்.. இது அந்த பிரிவின் சொந்தங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்குதாம்.. அங்க இலை பார்ட்டிகள் போட்டியிட ஆர்வம் காட்டுறதால, அ டீம் பார்ட்டிக்கு சீட்டு உண்டா, இல்லையா? நாம யாருக்கு வேலைசெய்றது, இப்பத்துல இருந்தே தெரிஞ்சாத்தானே நெளிவு சுளிவோட நடந்துக்க முடியும்னு மேங்கோ தொண்டர்கள் புலம்பத்தொடங்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஏக்கர் கணக்கில் நிலம் முறைகேடுல உடந்தையாக இருந்த அதிகாரி பெரும் கலக்கத்தில் உள்ளாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பனியன் மாவட்டத்தில் ஜம்புக்கல் மலைப்பகுதியில் பல ஏக்கர் நிலத்தை, ரியல் எஸ்டேட் பிரமுகர் ஒருவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளாராம்.. இதற்கு, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாக புகார் எழுந்துருக்கு.. அந்த இடத்திற்கு செல்ல ஏதுவாக அங்கு இருந்த புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, சாலை அமைப்பதற்காக மரம் மற்றும் கனிம வளங்களை வெட்டி எடுத்துள்ளார்களாாம்.. இந்த முறைகேட்டை தட்டிக்கேட்க வேண்டிய வருவாய்துறையை கவனிக்கும் கோட்ட அதிகாரி, பச்சை கம்பளம் விரித்து அந்த ரியல் எஸ்டேட் பிரமுகரை வரவேற்றாராம்.. இந்த கோட்ட அதிகாரி, இதுபோன்ற மோசடி கும்பலிடம் அன்கோ போட்டுக்கொண்டு பல லட்சங்களை சுருட்டுகிறாராம்.. ஆய்வு என்ற பெயரில் அரசு கணக்கில் பில் போட்டு அசத்துவதிலும் இவர் வல்லவர் என சொல்றாங்க.. இந்த அதிகாரியின் தில்லுமுல்லு வேலைகள் மாவட்டத்தின் உயர் அதிகாரிக்கு தெரியவந்ததாம்.. இதன்பிறகு உயர்மட்ட விசாரணைக்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாம்.. இதனால் கோட்ட அதிகாரி பெரும் கலக்கத்தில் இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.