Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேர்தல் விதிகளுக்கு முரணாக நடந்ததாக வழக்கு மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன் வெற்றி செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதிமாறன் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தயாநிதி மாறன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17ம் தேதி நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப் பதிவு நாளான்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்ட்களுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 95 லட்சம் ரூபாயை விட அதிக தொகையை தயாநிதி மாறன் செலவிட்டார்.

மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்பதால், தேர்தல் செல்லாது என்று உத்தரவிட வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை நீக்க கோரி தயாநிதி மாறன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தயாநிதி மாறன் சார்பில் வழக்கறிஞர் சினேகா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த தேர்தல் வழக்கு வெறும் யூகங்களின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் தயாநிதி மாறன் தரப்பில் வீடுகளில் ஒட்டப்பட்டதாக கூறப்படும் போஸ்டர்களுக்கான செலவு என்று தோராயமான கணக்கையே தெரிவித்துள்ளார். இதில் விதி மீறல் நடந்ததற்கான முகாந்திரத்தை மனுதாரர் நிரூபிக்கவில்லை. பூத் ஏஜெண்டுகளுக்கான காலை உணவு, மதிய உணவு மற்றும் இருக்கை வசதிகளுக்கான செலவு குறித்து மனுதாரர் யூகங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.

பூத் ஏஜெண்டுகள் தயாநிதி மாறன் சார்ந்துள்ள கட்சியை சார்ந்தவர்கள். அதையும் சேர்த்துத்தான் அவர் தேர்தல் செலவு கணக்கில் காட்டியுள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக 2023 ஏப்ரல் 14 மற்றும் 15ம் தேதி நடத்தப்பட்ட பேரணியில் தயாநிதி மாறன் இல்லை. மனுதாரர் தாக்கல் செய்த வீடியோ பதிவில் தயாநிதி மாறன் எந்த இடத்திலும் இல்லை.

தயாநிதி மாறன்தான் அந்த பேரணிக்கு ஏற்பாடு செய்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மனுதாரர் எம்.எல்.ரவி, மனுவில் கூறியிருந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை. எனவே, தயாநிதி மாறனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தயாநிதி மாறனின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று உத்தரவிட்டார்.