தேர்தல் தோல்வி பயத்தில் எம்பி பதவி கேட்டு சேலத்துக்காரரிடம் அடம்பிடித்த மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பதவி கொடுக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் கதர் சட்டைக்காரர்கள் சிட்டாய் பறந்து வந்துட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் கொண்ட கட்சியென பெயரெடுத்தது கதர் கட்சி தானாம்.. நாங்கள் எல்லாம் ஆண்ட பரம்பரை என கதருக்கு பசை போட்டுக்கொண்டு சுத்தும் தலைவர்கள் இன்னும் அதிகமாகத்தான் இருக்காங்களாம்.. எப்போதும் ஏதாவது ஒரு கட்சியின் மீது ஏறி சவாரி செய்து கொண்டு செல்வதோடு, சுமப்பவரின் காதை கடிப்பதையும், இவர்களின் வாடிக்கையாக வச்சிருக்காங்களாம்.. தேர்தல் வரும்போதெல்லாம் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் வேண்டும் என நெருக்கடி கொடுப்பதே வேலையாக இருக்குதாம்.. தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த பிறகு வீரன், சூரன் என கொடி தூக்குவதும் கதர்காரர்களின் வாடிக்கையா இருக்குதாம்.. அதே நேரத்தில் அக்கட்சி ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தும்போது விரல் விட்டு தொண்டர்களை எண்ணிவிடலாமாம்.. ஆனால் பதவி கொடுக்கிறாங்கன்னு தெரிஞ்சதுன்னா சிட்டா பறந்து வந்திடுவாங்களாம்.. ஆனால் உழைக்கும் தொண்டர்களுக்கு கதர் கொடி மட்டும்தான் கிடைக்குமாம்.. அப்படிதான் சேலத்து ஊரிலும் சம்பவம் ஒன்று நடந்திருக்காம்.. மாநில தலைவர் பதவிக்கு யார் வருகிறார்களோ அவர்களுக்கென மாவட்டம் தோறும் அவர்களின் ஆதரவாளர்களை கொண்டு வந்திருவாங்களாம்.. ஆனால் இம்முறை அதுபோன்று கிடையாதுன்னு சொன்னதோடு மட்டுமல்லாமல் மாவட்டத்திற்கு ஒரு பார்வையாளர்களை அனுப்பி வச்சாங்களாம்.. மாங்கனி மாவட்ட தலைவர் பதவிக்கு 37 பேர் விண்ணப்பம் செஞ்சிருக்காங்களாம்.. இதனை பார்த்து தொண்டர்களே மனம் கசந்து அழுதிட்டாங்களாம்.. இவர்கள் எல்லோரும் போராட்டத்திற்கு ரெண்டு ரெண்டு பேரை அழைத்து வந்தால் கூட கூட்டத்தை காட்டலாம்.. ஒவ்வொரு முறையும் 15 ஏழை கொடிபிடிக்கும் தொண்டர்கள் வருவோம்.. ஆனால் பதவிக்கு 37 பேர் ஓடிவந்திருக்காங்கன்னா.. எங்க கட்சி எவ்வளவு வலிமை வாய்ந்ததுன்னு புல்லரித்து போறாங்களாம் மாங்கனி கதர்சட்டை தொண்டர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் தோல்வி பயத்தில் இப்பவே எம்பி சீட் கேட்டு அடம்பிடிச்ச சென்னையை சேர்ந்த மாஜிக்கு கையை விரிச்சிட்டாராமே சேலத்துக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சென்னையைச் சேர்ந்த இலைக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயமானவர்.. கடந்த தேர்தலில் ராயபுரம் தொகுதியில போட்டியிட்டு தோல்வியடைஞ்சார்.. மலராத கட்சி கூட்டணியினாலதான் நான் தோற்றேன் என்று ஆக்ரோஷமாக வேற பேட்டி கொடுத்தார்.. மீண்டும் மலராத கட்சியுடன் சேர்ந்தவுடன், கொஞ்ச நாள் மீடியாவிடம் பேசாமல் அமைதியாக இருந்தார்.. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் சேலத்துக்காரரை சந்தித்து, பிப்ரவரியில இலைக்கட்சி சார்புல காலியாகும் ரெண்டு எம்பி சீட்டில் ஒன்றை தனக்கு கொடுக்கும்படி கேட்டுள்ளார்.. தற்போது மலராத கட்சி கூட்டணியால் எப்படியும் ராயபுரத்தில் தோற்றுவிடுவேன்.. அதனால எம்பி சீட் கொடுங்க என்றாராம்.. ஆனால் சேலத்துக்காரரோ, வாசமான சைக்கிள்காரர் மீண்டும் சீட் கேட்கிறார்.. ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவதால் மாஜி துணை சபாநாயரும் கேட்கிறார். இவர்களில் யாரை நிறுத்துவது என்று கேட்டுள்ளார். வாசமான சைக்கிள்காரரால் நம் கட்சிக்கு எந்த பலனும் இல்லை.. இதனால எனக்கு கொடுங்க என்றாராம் மாஜி ஜெயமானவர்.. ஆனால், அவருக்காக பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறாங்க. என்னால என்ன செய்ய முடியும்னு கை விரிச்சிட்டாராம்.. கொடுத்தவங்களுக்கே மீண்டும் கொடுத்துக்கிட்டே இருந்தா எப்படின்னு ஜெயமானவரோ கோபமா வந்துட்டாராம்.. அதுமில்லாமல், சேலத்துக்காரர் மேல கடுமையான அதிருப்தியில இருக்காராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வலையை விரித்து காத்துக்கிட்டிருக்காங்களாமே மாங்கனி ஜெயில் ஆபீசர்ஸ்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்துல லேடி ஜெயில் ஒண்ணு இருக்கு.. இங்கு கைதிகளை விட வார்டர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்குதாம்.. இங்கு கோஷ்டி மோதலுக்கு பஞ்சமே இருக்காதாம்.. சும்மா இருந்தால்தானே பிரச்னை ஏற்படும் என்பதை தெரிஞ்சிக்கிட்ட சென்னை உயரதிகாரி, ஆறு பேரை மாற்றுப்பணிக்காக வெளியூருக்கு மாத்திட்டாராம்.. தற்போது 20 பேர் இருக்காங்களாம்.. அவர்களும் இருக்குமிடம் தெரியாமல் இருக்காங்களாம்.. எந்தவிதமான வம்பு தும்புக்கும் போறதில்லையாம்.. பங்கில் கிடைப்பதை வாங்கி கொண்டு அமைதி காப்பதாக சொல்றாங்க.. என்றாலும் இதற்கொரு வலுவான காரணமும் இருக்குதாம்.. மூன்று ஆண்டுகள் ஒரே ஜெயிலில் பணியாற்றினால் அவர்கள் வேறு ஜெயிலுக்கு மாற்றப்படுறாங்களாம்.. அதற்கான பட்டியலையும் எடுத்து வச்சியிருக்காங்களாம்.. அப்படி பார்த்தால் 5 ஆண்டுகள் முதல் அங்கிருக்கும் 20 பேருமே புழல், திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பட்டியலில் தான் இருக்காங்களாம்.. இந்த மாத இறுதியில் எல்லோரையும் தூக்கிட திட்டம் இருக்காம்.. இதனால எந்த சிக்கலிலும் சிக்கி விட கூடாது என்பதற்காக பதுக்கியிருப்பதாக சக வார்டர்களே சொல்றாங்க... அதே நேரத்தில் மாங்கனி சென்ட்ரல் ஜெயிலில் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் சப்ளை செய்யும் அதிகாரிகள் பட்டியலில் 10 பேர் இருப்பது பழைய செய்திதான்... அவர்களுக்கு வைத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத வலையை தெரிஞ்சிக்கிட்ட 5 பேர் வேலைக்கு வராம பதுங்கியிருக்காங்களாம்.. உடலும் உள்ளமும் நல்லாயில்லைன்னு லீவு கடிதம் கொடுத்திருக்காங்களாம்.. ஆனால் அவர்களின் செல்போன் ஸ்டேட்டசில் ஹேப்பியா இருப்பதை போல காட்டிக்கிட்டிருக்காங்களாம்.. என்றாலும் ஒருநாள் அவர்கள் வலையில் சிக்குவார்கள் என்ற எண்ணத்தோடு காத்திருக்காங்களாம் ஆபீசர்ஸ்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சீனியர்களை முந்தி கட்சியில் உயர்ந்த இடத்தை பிடித்த இலைக்கட்சி மாஜியானவர் தனது மகளையும் அரசியலில் முன்னிறுத்த போறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் மாவட்ட இலைக்கட்சியினர் 3 கோஷ்டிகளாக செயல்படுவது ஊரறிந்த விசயம்.. இதில், செல்லூர்காரரும், செல்லமானவரும் கட்சியில் ரொம்பவே சீனியர்கள். இவர்களுக்கு பின்னால் கட்சிக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்தவர் உதயமானவர். சீனியர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி தற்போது எதிர்கட்சி துணைத் தலைவர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.. கட்சியின் தலைமையான சேலத்துக்காரரும் தென்மாவட்டங்கள் தொடர்பாக எதுவாக இருந்தாலும் உதயமானவருடன் தான் முதலில் ஆலோசிப்பதுடன், முக்கியத்துவமும் கொடுக்கிறாராம்.. இதனால், சீனியர்கள் இருவரும் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் நிலையில், அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளாராம் உதயமானவர்.. தற்போது தனது மகளை அரசியல்ரீதியாக எங்கு சென்றாலும் அழைத்து செல்கிறாராம்.. குறிப்பாக தனக்கு ஒரு தொகுதி, தனது மகளுக்கு ஒரு தொகுதி என்ற கணக்கில் அவரை அரசியலில் முன்னிறுத்துகிறாராம்.. இதற்காக கட்சியினருடன் விருப்பமனு தாக்கல் செய்வதற்காக சென்னை கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது தனது மகளையும் அழைத்து சென்றாராம்.. அதனால், புறநகரில் தனக்கும், நகரில் தனது மகளுக்கும் ஒரு சீட் கேட்கும் முடிவில் உறுதியாக உள்ளாராம் உதயமானவர்.. இதனால், தூங்கா நகரில் யாருடைய சீட் பறிபோகும் என்ற பதற்றத்தில் கட்சியினர் உள்ளார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


