தேர்தல் நடந்தால் கட்டிட பணி பாதிக்கப்படும் நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் நீட்டிப்பு ஏன்? உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தகவல்
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 19ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த 2024 செப்டம்பர் 8ம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மேலும் 3 ஆண்டுகளுக்கு நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நடிகர் நம்பிராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், பதவிக்காலத்தை நீட்டிக்கும் பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நடிகர் சங்கத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் சார்பில் தாக்கல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட கட்டுமான பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு 60 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. தங்களுடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிவடைய இருந்த நிலையில் 2025-28 புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டால் சங்க நிர்வாகத்தின் கட்டிட பணிகள் பாதிக்கப்படும். எனவேதான், பொதுக்குழு, செயற்குழுவில் தற்போதைய நிர்வாகிகளுடைய பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றி முடிவெடுக்க பொதுக்குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பதவி கால நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை. விதிகளுக்கு உட்பட்டு நடந்த பொதுக்குழு தீர்மானத்தில் 300 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதற்கான ஆவணம் பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யபட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, இருதரப்பினரின் விரிவான வாதத்திற்காக வழக்கை 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


