மவுனம் சாதிக்கும் தேர்தல் ஆணையம் பீகாரில் ரூ.10,000 கொடுத்து வாக்குகளை களவாடி விட்டார்கள்: செல்வப்பெருந்தகை சாடல்
சென்னை: முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 137ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அவரது உருவ படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கண்ணகி நகரை சேர்ந்த இந்திய கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி செல்வப்பெருந்தகை கவுரவித்தார்.
தொடர்ந்து, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பீகாரில் வாக்குகள் களவாடப்பட்டு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அந்த கருத்தில் நாங்களும் உடன்படுகிறோம். தேர்தல் நெருங்கி வந்ததும் ரூ.10 ஆயிரம் கொடுத்து வாக்குகளை களவாடி விட்டார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இது என்ன ஜனநாயகம். பீகாரில் தேர்தல் முடிவை களவாடி விட்டார்கள்.
அங்கு 17 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எவ்வளவு காலம் தேர்தல் முடிவுகளை பாஜ களவாட முடியும், பாஜ ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். கடந்த ஆண்டு தேர்தலில் 100க்கு 100 வெற்றியை தமிழ்நாடு கொடுத்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், விஜயன், பொன் கிருஷ்ணமூர்த்தி, இமயா கக்கன், பொருளாளர் ரூபி மனோகரன், அசன் மவுலானா எம்எல்ஏ, அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாவட்ட பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன், பொதுச் செயலாளர் பி.வி.தமிழ்செல்வன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.