அரசியல் கட்சிகளின் அறுவடை நாள் என அழைக்கப்படும் தேர்தல் திருவிழா ஒருவழியாக தேர்தல் ஆணையத்தால் நேற்று அறிவிக்கப்பட்டு விட்டது. ஐந்தாண்டு கால பொற்கால ஆட்சியை மக்கள் எப்படி பார்க்கின்றனர் என்பதை அறிய ஆளும் கட்சியினரும், தங்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு கிடைக்காதா என எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்காக வரிந்து கட்டுவது வழக்கம். இவ்வாண்டுக்கான தேர்தல் திருவிழா வரும் ஏப்ரல் மாதத்தில் களைக்கட்ட உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாமில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் தேர்தல் இரண்டு கட்டமாகவும் நடக்கவுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. சட்டசபை தேர்தலை ஒட்டி வரும் 30ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஏப்ரல் 6ம் தேதியாகும். இத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியானது திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மதிமுக, தேமுதிக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை உள்ளடக்கி பிரமாண்டமாக காணப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியானது அதிமுக தலைமையில், பாஜ, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கி தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இம்முறை தேர்தல் களத்துக்கு புதுவரவான தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் இம்முறை 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 2 கோடியே 89 லட்சம் ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 77 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
மொத்த வாக்காளர்களில் 12.51 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். தமிழகத்தை பொறுத்தவரை சட்டசபை தேர்தல் ஒவ்வொரு முறையும் கோடை காலத்தில் நடைபெறுவது வழக்கம். இம்முறையும் கொளுத்தும் வெயிலில் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அனைத்து கட்சிகளும் நடப்பு மார்ச் மாதத்திற்குள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விடும் என்பதால், ஏப்ரல் மாதத்தில் 20 நாட்களும் பிரசாரம் சூடுபிடிக்கும்.
தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளை அடையாளம் கண்டு விட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை மட்டுமே இறுதி செய்ய வேண்டியதுள்ளது. அதிலும் பிரதான கட்சிகள் இப்போதே நேர்காணலை நடத்தி, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளிலும் இறங்கி விட்டன. தேர்தல் பிரசாரம் தொடங்கும் நாள் முதல் தேர்தல் நாள் வரை வாக்காளர்களை அரசியல் கட்சிகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது இயல்பு. அந்த வகையில் அடுத்து வரும் ஒரு மாத காலம் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம் என தமிழக வாக்காளர்கள் மகிழ்ச்சி கடலில் மிதக்க உள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை பொறுத்தவரை இவ்வாண்டு தேர்தல் ஏப்ரல் இறுதியில் வைக்கப்பட்டிருப்பது வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் வசதியாக உள்ளது. குறிப்பாக கேரள மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் நிலையில், தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதிக்கு, சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாக நாம் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் போல், ஒருமாத காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் நடந்த 12 தினங்களுக்குள் முடிவுகள் வெளியாகும் என்பதால் வேட்பாளர்கள் நிம்மதியாக தூங்க முடியும். ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இத்தேர்தலில் தங்களுக்கான தகுதியான ஆட்சியாளர் யார் என்பதை புரிந்து வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்.
