முதியவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாமனார் வீட்டில் நிரந்தரமாக வசிக்க மருமகள் உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி: முதியவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாமனார் வீட்டில் மருமகள் தொடர்ந்து வசிப்பதற்கு உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார். குடும்பப் பிரச்னை காரணமாக அவர் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதே வீட்டில் வசிக்க உரிமை கோரியிருந்தார். ஆனால், அந்தப் பெண் அங்கு தங்கியிருப்பது வயதான மாமனார் மற்றும் மாமியாரின் உடல்நலத்திற்கும், அமைதிக்கும் கேடு விளைவிப்பதாகக் கூறி, அவரை இரண்டு மாதங்களுக்குள் வீட்டை காலி செய்யுமாறு தனி நீதிபதி முன்பு உத்தரவிட்டிருந்தார்.
மேலும், அந்தப் பெண் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு மற்றும் பராமரிப்புத் தொகை வழங்கவும் கணவர் தரப்பிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அந்தப் பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அனில் ஷேத்ார்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. தீர்ப்பின் போது நீதிபதிகள், ‘குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ன் கீழ் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் குடியிருப்பு உரிமை என்பது பாதுகாப்புக்கானதுதானே தவிர, அது சொத்துரிமையோ அல்லது மாமனார் வீட்டில் காலவரையன்றி தங்குவதற்கான உரிமமோ அல்ல’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மேலும் ‘மருமகளின் நடவடிக்கைகளால் முதியவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படும்போது, அவர்கள் தொடர்ந்து அந்தத் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று சட்டம் கூறவில்லை; மாற்று தங்குமிட வசதி செய்து தரப்படும் பட்சத்தில், முதியவர்களின் அமைதியான வாழ்க்கையே முக்கியம்’ என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவு நியாயமானது என்று கூறி நீதிமன்றம் வழக்கினை முடித்து வைத்தது.