Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எல்நினோ உஷார்

மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகளால் நாம் பாதிப்பை சந்தித்தாலும் எளிதில் மீண்டு வந்து விட முடியும். ஆனால், இயற்கையில் ஏற்படும் சில மாற்றங்கள் உலகளவில் பல்வேறுவிதமான தாக்கத்தையும், சில நேரங்களில் பேராபத்தையும் கொண்டு வந்து சேர்த்து விடும். 2004, டிச. 26ல் ஏற்பட்ட சுனாமியையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் மறக்க முடியுமா? அந்த வகையில் இந்தியாவையும் சில உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் இயற்கை மாற்றம்தான் எல்நினோ.

சிறுவன் அல்லது குழந்தை என பொருள் தரக்கூடிய வார்த்தை - எல்நினோ. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில், சில நேரம் கடலின் மேற்பரப்பு நீரானது வழக்கத்தை விட 0.5 - 0.7 செல்சியஸ் வரை அதிக வெப்பமாக இருக்கும். இதையே எல்நினோ என்கிறோம். இதே மேற்பரப்பு 2 - 7 செல்சியஸை தாண்டி வெப்பமாக இருந்தால் ‘சூப்பர் எல்நினோ’ எனப்படும். இந்த சூப்பர் எல்நினோ தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய வறட்சியை உருவாக்குமென வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக, நடப்பு மாதம் முதல் செப்டம்பர் வரை பெய்யக்கூடிய, தென்மேற்கு பருவமழையை அதிகம் பாதிக்கும் என்கின்றனர். ஜூலை மாதம் முதல் இதன் தாக்கம் தீவிரமடையுமென கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தென்மாவட்டங்களில் பெரியாறு அணை, வைகை அணை போதிய மழையின்றி நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையும் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12ம் தேதி இம்முறை திறக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் அணைகளில் போதிய நீரின்றி கடும் வறட்சியாக உள்ளது.

இதனால் இம்மழையை எதிர்பார்த்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையை நம்பித்தான் 60 - 70 சதவீத இந்திய விவசாயம் இருக்கிறது. வழக்கமான அளவு பொழியாவிட்டாலும், விவசாய பாதிப்பு எதிர்பார்த்தை விட கடுமையாக இருக்கும். மேலும், காவிரி உட்பட தென்னிந்திய நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், நடப்பு தேதியில் பருவமழை 43 - 45 சதவீதம் வரை பற்றாக்குறையாக உள்ளது.

ம.பி, கோவா, ஒடிஷா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை பற்றாக்குறை 59 சதவீதம் ஆகவும், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் 42 சதவீதமாக உள்ளதை வைத்தே சூப்பர் எல்நினோவின் தாக்கத்தை நாம் அறியலாம். வழக்கமாக ஜூலை மாதம் துவங்கும் காலங்களில் வெப்பநிலை குறைவாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது வெயில் கொளுத்தி வருகிறது.

கடந்த கோடைகாலங்களை விட ஜூலை - செப்டம்பர் அல்லது அக்டோபர் வரை கூட கோடை வெப்பம் நீடிக்கலாமென கருதப்படுகிறது. இதனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெயில் 107 டிகிரி வரை செல்லலாம் என்கின்றனர். இந்திய அளவில் எல்நினோ தாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய சுமார் 150 முதல் 200 மாவட்டங்களை ஒன்றிய அரசு கண்டறிந்துள்ளது.

இங்கு விவசாய பாதிப்பை தடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ஆலோசித்து வருகிறது. மக்கள் அதிக வெப்பத்தால் ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க தண்ணீர் அதிகம் பருகவும், நீர்ச்சத்து கூடுதலாக உள்ள காய்களை உண்ணவும், ஓஆர்எஸ் கரைசலை அவ்வப்போது எடுத்துக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அரசுகள் இதன் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க, எல் நினோ கண்காணிப்பு பிரிவை உருவாக்கி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.