Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எட்டுப்பட்டை... அமோக விளைச்சல் கொடுக்கும் புதிய ரக எள்!

எட்டுப்பட்டை எள் என்ற புதிய வகை எள் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. இந்த வகை எள்ளைப் பயிரிட்டு விளைச்சல் எடுத்த திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற விவசாயியைச் சந்தித்துப் பேசினோம். ``வழக்கமான எள்ளில் 4 பட்டைகள்தான் இருக்கும். இந்த எள்ளில் 8 பட்டைகள் (அறைகள் போன்ற அமைப்பு) இருக்கிறது. இந்த எட்டுப்பட்டை எள்ளில் விளைச்சல் அதிகமா கிடைக்குது, எண்ணெய் அளவும் அதிகமாஇருக்கு” என பேசத் தொடங்கியவர், மேலும் தொடர்ந்தார். “நெலத்துல உழவு ஓட்டி, களை இல்லாம நல்லா வச்சிக்கணும். மழை பெஞ்சி 3 நாள் கழிச்சி மண் ஈரமா இருக்கும்போது எள்ளை விதைக்கணும். நிலத்துல தண்ணி பாய்ச்சிட்டு விதைக்கறதை விட, மழைக்கு அப்புறமா விதைக்கும்போது முளைப்புத்திறன் நல்லா இருக்கும். மார்கழியிலர்ந்து சித்திரை வரைக்கும் எள்ளை விதைக்கலாம். ஏக்கருக்கு 2 கிலோ எள் விதைச்சா போதும். கைப்பக் குவத்துக்கு ஏத்த மாதிரி 2 கிலோ எள் கூட 5 கிலோலர்ந்து 10 கிலோ மண் எடுத்து, அந்த மண்ணோட எள்ளைக் கலந்து விதைக்கணும் விதைச்சு ஆறேழு நாள்ல முளைச்சி வந்துடும்.

எள்ளுப்பயிர் அரையடிக்கு வளந்தப்புறம், களை எடுக்கணும். நெருக்கமா வளந்திருக்கற செடிகளையும் களைச்சி எடுத்துடணும். பாக்டம்பாஸ் உரம் போடணும். ஆர்கானிக்கா பண்ணினா எரு போடலாம். 35 நாள்ல ஒன்னரை அடி வளர்ந்து பூ பூக்கும். அப்டியே கணு கணுவா வளர்ந்து பூ எடுக்கும்; காய்க்கும். இது வறட்சியைத் தாங்கி வளரும். செடி வாடுதான்னு பாத்து தண்ணி விட்டாப் போதும். 60 நாள் வரைக்கும் பூத்து காயாகிடும். எள் செடி 85லர்ந்து 90 நாள்ல மஞ்சள் கலரா மாறும். சரியான இடைவெளியில பயிர் செஞ்சா, கிளைகள் நிறைய வெடிக்குது. மகசூலும் அதிகமாகுது. செடி அறுவடை நிலைக்கு வந்தப்புறம் சாணை மாதிரி வைப்போம். அறுவடை பண்ண செடியை, வெட்டின பாகம் வெளிப்பக்கம் தெரியிற மாதிரியும், காய்கள் உள்ள இருக்குற மாதிரியும் சுத்தி வட்டமா, நல்ல உயரமா அடுக்கிடுவோம். பாளை தழைய உள்ளேயும் மேலயும் வச்சிடுவோம். செடி மெல்லமா சூடேறி ஆவிபுடிச்சி வளவளப்பா ஆகிடும். ரெண்டு மூணு நாளுக்கப்புறம் கட்டைகளை ஒடச்சி, எள்செடியை எடுத்து வெயில்ல காய வைக்கணும். ரெண்டுமூணு நாள்ல எள் வெடிக்கத் தொடங்கிடும். அப்போ செடியை தலைகீழா உதறினா, எள்ளெல்லாம் கொட்டிடும். சாதாரண எள் ஏக்கருக்கு 300லர்ந்து 400 கிலோ கிடைக்கும்.

எண்ணெய்ப்பதம் 40 சதவீதம் இருக்கும் இந்த எட்டுப்பட்டை எள் ஏக்கருக்கு 500 கிலோ வரைக்கும் எடுக்கலாம். எண்ணெய் சத்து 50 சதவீதம் இருக்கும். எண்ணெய் நல்ல கோல்டன் கலர்ல இருக்கும். கசப்புத்தன்மை குறைவா இருக்கும்” என்றவர், விதைக்காக எள்ளை விளைவிக்கும் விதம் பற்றியும், எட்டுப்பட்டை எள்ளின் சிறப்பு பற்றியும் பேசினார். ``விதைக்காகப் பண்ணும்போது நல்ல பழுத்த செடியா விட்டு, திரட்சியான விதைகள் வந்த பிறகு உட்டுக்கட்டாம (சூடேத்தாம), நேரா நிக்கவச்சி காயவைப்போம். ஏக்கருக்கு 2 கிலோ எள் விதை போதும் கிலோ 250 ரூபாய். 2 கிலோ 500 ரூபாய். ஆள் செலவும் கம்மி. விதைச்சப்புறம் ஒருதடவை களை எடுத்தா போதும். அறுவடை பண்ணி, களத்துல போட்டு உதிர்த்து எடுக்குற அன்னைக்கு 2 நாள் வேலை இருக்கும். அதனால இந்த எள்ளுல செலவு கம்மி, லாபம் ஜாஸ்தி” என்றார்.

எட்டுப்பட்டை எள்ளில் “துர்கா” என்ற விதைச்சான்று பெற்ற ரகத்தை விளைவித்து, தரம் பிரித்து விற்பனை செய்கிறார் சேலம் மாவட்டம் பைத்தூர் புதூரைச் சேர்ந்த சிவராஜ். அவரிடம் நாம் பேசியபோது, “துர்கா என பெயரிடப்பட்டுள்ள எட்டுப்பட்டை எள் ரகத்தைத் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்கிறோம். இதை விளைவித்த விவசாயிகள் எண்ணெய்க்கு ஆட்டும்போது வழக்கமான எள் ரகங்களை விடக் கூடுதலான எண்ணெய் கிடைப்பதாக கூறுகின்றனர். காரணம் இந்த ரக எள்ளில் 50 சதவீதம் எண்ணெய் இருக்கிறது. விளையும் எள்ளில் விதைக்கென ஒரு பகுதியை எடுத்து மீண்டும் விதைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் விதை வாங்க வேண்டிய தேவை இல்லை. தரமான எள் வித்துக்களை விளைவிக்கும் விவசாயிகளிடமிருந்து எள் வித்துக்களை நாங்களே வாங்கி, தூசு தும்பு நீக்கி, தரமான எள் வித்துக்களை விற்பனை செய்கிறோம். இந்த துர்கா ரக எட்டுப்பட்டை எள் முதிர்ந்ததும் இலைகளில் பாதி வயலிலேயே விழுந்துவிடும் என்பதால் இதை காயவைக்கும் காலமும், செலவும் குறைவு.

இந்த எள் பழுப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருக்கும். இந்த எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் கசப்புத்தன்மை குறைவாக இருக்கும். எண்ணெய்யின் நிறமும் பொன்னிறமாக இருக்கும். இந்த எள் வித்துக்களை மொத்த விலையில் கிலோ 300 ரூபாய்க்கு விற்கிறோம். போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களால் சில்லரை விற்பனையில் எள் வித்தின் விலை சற்றே கூடுதலாக இருக்கும். எங்கள் விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது” என்றார்.

தொடர்புக்கு:

ராஜேஷ்: 88707 16680.