ரன்வே பத்திரிகையில் ஆதிக்க மனநிலையில் இருக்கும் பொறுப்பாசிரியர் மிராண்டா (மெரில் ஸ்ட்ரீப் ) தனக்கு கீழ் வேலை பார்க்கும் அத்தனை பேரையும் விரல் நுனியில் வைத்து ஆட்டுவிக்கிறார். உலக அளவில் டாப் ஃபேஷன் பத்திரிக்கை என்பதால் அந்த பத்திரிகையில் வேலை செய்வதற்காகவே பலரும் தவம் கிடக்கிறார்கள். அந்த நேரத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் அல்லது பணியின் அழுத்தம் குறித்தும் தெரியாமல் அங்கே வந்து சேர்கிறார் ஆண்டி சாக்ஸ் (ஆனே ஹாத்வே). எதிலும் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கும் ஆண்டி, மேலதிகாரியின் அடக்குமுறை, உதாசீனம் என சந்திக்கிறார். இருப்பினும் வேகமாக வேலையை கற்றுக்கொண்டு தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடிக்கிறார். இதனால் மிராண்டாவுக்கு ஆண்டியை பிடித்து விடுகிறது. இருப்பினும் தனக்கான நேரம் மற்றும் நண்பர்கள் காதல் என எதற்கும் தன்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதை புரிந்து கொண்டு அந்த வேலை வேண்டாம் என முடிவு செய்கிறார் ஆண்டி. முதல் பாகம் 2006ஆம் வருடம் இப்படி நிறைவடைந்தது.
இப்போது இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாகியிருக்கிறது. அச்சு ஊடகங்கள் சிக்கலான தருவாயில் இருக்கும் நிலையில் படம் துவங்குகிறது. உண்மையாகவே 20 வருடங்கள் கழித்து ஆரம்பிக்கும் இந்தக் கதையில் ஆண்டி சாக்ஸ் வெற்றிகரமான புகழ்பெற்ற நிருபராக விருது வாங்குகிறார். சரியாக விருது பெரும் தருணத்தில் அவருடன் அவரையும் சேர்த்து பணிபுரியும் அத்தனை பேரும் வேலையை விட்டு நீக்கப்படும் மெஸ்ஸேஜ் எல்லோருடைய மொபைலிலும் வருகிறது. விருதைப் பெற்றுக் கொண்டு அந்த செய்தியையும் அறிவித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார் ஆண்டி. இதே வேளையில் ரன்வே பத்திரிகையும் விளம்பரங்களை பெற்று அதன் மூலம் நடத்த வேண்டிய சூழலில் தத்தளிக்கிறது. பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருக்கும் மிராண்டா இப்போது கையறு நிலையில் இருக்கிறார். இந்த வேளையில் ஏதாவது ஒரு பத்திரிக்கை வேலை என ஆண்டி மீண்டும் ரன்வே பத்திரிகையில் வேலைக்கு சேர்கிறார். அங்கே மிராண்டாவிற்கு ஆண்டியை ஞாபகமே இல்லை. இன்னொரு புறம் ரன்வே பத்திரிக்கை மற்றும் மிராண்டாவின் பதவி என அனைத்தும் பறிபோகும் நிலையில் மாறி இருக்க இதைத் தடுக்க பலவாறு முயற்சி செய்கிறார் ஆண்டி. தனக்கு வேலையை கற்றுக் கொடுத்த ஒரு நிறுவனம் இன்று மூழ்கிக் கொண்டிருப்பதை மீட்டெடுக்க நினைக்கிறார். இவருடைய உண்மையான மனநிலையை புரிந்துகொண்டு உயர் அதிகாரி மிராண்டாவும் கை கொடுக்க முடிவு என்ன என்பது மீதி கதை.
முதல் பாகம் வேலைக்குச் செல்லும் பெண்களின் வாழ்வியல், உயர் அதிகாரியின் அழுத்தம், குறிப்பாக பத்திரிகையாளர்களின் மனநிலை , ஃபேஷன் உலகம் என அனைத்தையும் ஒரே கதையில் சமமாக கலந்து கொடுத்ததால் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. அதிலும் பெண்களின் ஆளுமை என்னவெல்லாம் செய்யும் ஒரு பெண் நினைத்தால் ஒரு வேலையை எப்படி கற்றுக் கொள்வாள், அதேசமயம் அவளுக்குரிய மீ டைம் எவ்வளவு முக்கியம் என அனைத்தையும் மிக அழகாக காண்பித்தது.
இரண்டாம் பாகத்தில் எத்தனை வருடங்கள் ஆனாலும் தனக்கு தொழிலும், மதிப்பும் கொடுத்த ஒரு நிறுவனம் மூழ்கும் போது அதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் , மேலும் அதிகாரம் ஒரே இடத்தில் இருக்காது மாறிக்கொண்டே இருக்கும் என்பதையும் இந்தப் பாகம் எடுத்து வைத்திருக்கிறது. உண்மையாக உழைத்தால் அதற்கான பலனும், அங்கீகாரமும் நிச்சயம் ஒருநாள் தேடி வரும் என்கிற உண்மையும் படத்தில் நைஜில் என்கிற பாத்திரம் மூலம் வைத்தது சிறப்பு. உழைத்த நிறுவனத்துக்கு நல்லது செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை, கெடுதல் நினைக்காதே என எமிலி கதாபாத்திரம் மூலம் சுட்டிக்காட்டியது கதையில் இன்னொரு சிறப்பு.
இந்தக் கதையையும் மிராண்டா குறித்தும் ஒரு புத்தகமாக வெளியிட நினைத்து அதற்கான வேலைகளையும் ஆண்டி சாக்ஸ் செய்வது போல காட்சி வரும். உண்மையாகவே ஆண்டி சாக்ஸ் பாத்திரம் லாரென் வெய்ஸ்பெர்கெர் என்பவரின் உண்மையான கதாபாத்திரம். மிராண்டா கதாபாத்திரம் அமெரிக்க ஃபேஷன் பத்திரிகையான வோக் , பொறுப்பாசிரியர் ஆன்னா வின்டரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. லாரென் எழுதிய புத்தகத்தைத் தழுவியே இவ்விரு படத்தையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டேவிட் ஃபிராங்கெல். வேலைக்கு செல்லும் பெண்கள், ஃபேஷன் விரும்பிகள், தனக்கான அங்கீகாரம் கிடைத்தும் அதில் அழுத்தம் கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கும் நபர்கள் என இப்படம் அவரவருக்கு ஏற்ப வகுப்பெடுக்கும். இரு படங்களுமே கண்களை கவரும் ஃபேஷன் உடைகள், ராம்ப் வாக் என ஈர்க்கும். ஆனே ஹாத்வே, எமிலி ப்ளண்ட், மெரில் ஸ்ட்ரீப் ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள ‘த டெவில் வியர்ஸ் பிரடா 2’ தற்போது திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் ஓடிடி தளத்தில் உள்ளது.
- மகளிர் மலர் குழு.
