Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தினமும் ஒரு முட்டை நல்லதா? கெட்டதா? ஆராய்ச்சியில் அசத்தல் தகவல்

முட்டைகளை அதிகமாக சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி, உடல்நலக் குறைவு ஏற்படும் என்றெல்லாம் கூறப்பட்டு வருகிறது. ஆனால் முட்டையில் உள்ள புரதச்சத்துகள் மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கிறது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இதுபற்றி குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் முட்டை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டனர். குறிப்பாக 8 ஆயிரம் முதியவர்களை அவர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

அதில் முட்டைகளை அதிகமாக சாப்பிடுவதால், உடல்நலக் குறைவு ஏற்படும் என்ற கூற்றை அவர்கள் மறுத்துள்ளனர். மேலும் தினமும் ஒரு முட்டை சாப்பிடும் முதியவரின் மரணம் தள்ளிப்போனதை அவர்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. முதிய வயதில் முன்கூட்டியே மரணம் அடைவதை தடுக்கிறது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

8 ஆயிரம் முதியவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் முட்டைகளை அரிதாகவோ அல்லது ஒருபோதும் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது, ​​வாரத்திற்கு 1 முதல் 6 முறை முட்டைகளை உட்கொள்பவர்கள் இறக்கும் அபாயம் மிகக் குறைவாக இருந்தது. குறிப்பாக இதய நோய் இறப்புகளுக்கு 29 சதவீதம் குறைவு . ஒட்டுமொத்த இறப்பும் 17 சதவீதம் குறைவாக இருந்தது. தினமும் முட்டை சாப்பிடுவதால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படவில்லை. மாறாக உடல் வலுப்பெற்று இருந்தது.

ஒரு பெரிய முட்டையின் மஞ்சள் கருவில் தோராயமாக 275 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இது தினசரி உணவில் பரிந்துரைக்கப்பட்ட கொலஸ்ட்ரால் வரம்புக்கு அருகில் உள்ளது. இதனால் மருத்துவ வல்லுநர்கள் முட்டை போன்ற கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கலாம். அதனால் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று எச்சரித்தனர்.

ஆனால் புதிய ஆராய்ச்சி, உணவுக் கொழுப்பை உடல் ஏற்காது. எனவே உணவுக் கொலஸ்ட்ரால் இரத்தக் கொழுப்பு அளவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது. எனவே மருத்துவ தடை இல்லாவிட்டால் முட்டையை எந்தவடிவிலும் அதாவது அவித்து, வறுத்து, ஆம்லெட் போட்டு உங்களுக்கு பிடித்த வகையில், அதுவும் அளவோடு பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்.

* முட்டையில் என்ன உள்ளது?

முட்டை புரதத்தின் நல்ல மூலமாகும். பி வைட்டமின்கள், போலேட், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (ஏ, டி, ஈ மற்றும் கே), கோலின் மற்றும் தாதுக்கள் ஆகியவை முட்டையில் உள்ளன.