ஐதராபாத்: வணிக ரீதியில் கருமுட்டை வாங்குவோர் சாதி, சமயம், நிறம், உயரம் மற்றும் படிப்புத் திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், இவற்றில் எத்தனை பொருத்தமான தகுதிகளை ஒரு பெண் பெற்றுள்ளாரோ அதன் அடிப்படையில் அவரது கருமுட்டைக்கு அதிகளவில் டிமாண்ட் உள்ளதாக கருமுட்டை தானம் மோசடி குறித்த புகாரை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பணம் வாங்கிக்கொண்டு கருமுட்டை தானம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கருமுட்டை தானம் வழங்குபவர்கள் 23 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏற்கெனவே திருமணமாகி, குறைந்தது 3 வயதான ஒரு குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே, அதுவும் அதிகபட்சமாக 7 கருமுட்டைகள் வரை மட்டுமே தானம் செய்ய முடியும். தானம் வழங்குவோர் மற்றும் பெறுவோரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். கருமுட்டை தானம் வழங்குபவர் பிறந்த குழந்தைக்கு எந்தவொரு உயிரியல் அல்லது சட்டப்பூர்வ உரிமையும் கோர முடியாது என்ற விதிகள் நாடு முழுவதும் அமலில் உள்ளன.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் உள்ள மல்காஜ்கிரி பகுதியில் கருமுட்டை தானத்தில் மெகா மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கூறிய மல்காஜ்கிரி ஏரியா போலீசார் கூறுகையில், நாட்டில் வணிக ரீதியிலான கருமுட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், வறுமையில் சிக்கி தவிக்கும் குடும்பத்தை சேர்ந்த பெண்களை குறி வைத்து அவர்களுக்கு பணம் கொடுத்து கருமுட்டைகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அதுவும் எல்லா பெண்களின் கருமுட்டையையும் விலைக்கு வாங்குவது கிடையாது. கருமுட்டை தரும் பெண்ணின் சாதி, மதம், நிறம், உயரம் மற்றும் படிப்புத் திறன் போன்றவற்றின் அடிப்படையில்தான் தேர்வு செய்துள்ளனர்.
கருமுட்டையை பெற விரும்பும் குடும்பம் மேல் கூறியவற்றில் எந்தெந்த தகுதிகளுடன் கூடிய பெண்ணின் கருமுட்டையை எதிர்பார்க்கிறது என்பது சட்ட விரோத ஏஜெண்டுகளின் வாட்ஸ்அப் குரூப் நெட்வொர்க்கில் பகிரப்படுகிறது. இதனை அறிந்து கொண்டு அதற்கேற்ற பெண்ணிடம் இருந்து கருமுட்டைகளை வாங்கி விற்கும் செயலில் மாபியா கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன எனத் தெரிவித்தனர். பணத்தேவையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான மற்றும் திருமணமாகாத 35 வயது பெண்களை அணுகி, ஆசை வார்த்தை கூறி அவர்களை தங்களது வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து சட்ட விரோதமாக கருமுட்டைகள் பெறப்படுகின்றன. உயர் சாதி, சிறப்பு நிறம், நல்ல உயரம் மற்றும் நன்றாக படித்துள்ள பெண்ணின் கருமுட்டைகளுக்கு கிராக்கி அதிகம் என்பதும், அவை அதிக விலைக்கு விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
இந்த மெகா மோசடியில் முக்கிய குற்றவாளியான அமித் ஷர்மா இதற்காக பெண்கள் தங்கும் விடுதி என்ற பெயரில் மேற்கு வங்கம், சட்டீஸ்கர், டெல்லி, அசாம், உ.பி., ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களில் இருந்து பெண்களை வரவழைத்து கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவ்வாறு கருமுட்டை வழங்கும் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் வரை தொகை வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த கருமுட்டை தான மோசடியின் போது மீட்கப்பட்ட 48 பெண்களும் இதற்கு முன்பு கருமுட்டை தானத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள 23 ஐவிஎஃப் சிகிச்சை மையங்களுடன் சம்பந்தப்பட்ட கருமுட்டை தான ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதா என காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.


