Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் வீட்டிலிருந்து ரகசியமாக ஆடி காரில் தனி ஆளாக சென்ற செங்கோட்டையன்: 2 மணி நேரம் நீடித்த மர்மம்; எஸ்.பி.வேலுமணியுடன் சந்திப்பா?

கோபி: எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் வீட்டில் இருந்து ரகசியமாக ஆடி காரில் செங்கோட்டையன் வெளியேறினார். எஸ்.பி.வேலுமணி சந்திக்க வர இருப்பதாக கூறி இருந்த நிலையில், செங்கோட்டையன் தனி ஆளாக சென்று 2 மணி நேரம் கழித்து வீடு திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அதிமுக தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோபியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நிகழ்ச்சி முடிந்த பிறகு குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டிற்கு சென்றார். பின்னர், அவருடன் இருந்த முன்னாள் எம்பி சத்தியபாமா, செங்கோட்டையனின் உதவியாளர் சபேசன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் உள்ளிட்ட அனைவரையும் செங்கோட்டையன் வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் சென்னை பதிவெண் கொண்ட ஆடி கார் ஒன்று அவரது வீட்டிற்கு சென்றது.

சில நிமிடங்களில் அந்த கார் வெளியேறியது. முற்றிலும் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த ஆடி காரில் ஏறிய செங்கோட்டையன் ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறினார். கே.ஏ.செங்கோட்டையனை சந்திக்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவதாக தகவல் பரவிய நிலையில், அவரது வீட்டின் முன் செய்தியாளர்கள் குவிந்ததை தொடர்ந்து செங்கோட்டையன் ரகசியமாக காரில் வெளியேறினார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அவருடைய காரில் வீடு திரும்பினார். இரண்டு மணி நேரம் வெளியே சென்ற செங்கோட்டையன் யாரை சந்தித்தார் என்பது மர்மமாக உள்ளது.

* துரோகிகள் யார்? செங்கோட்டையன் விளக்கம்

கோபியில் நேற்று காலை செங்கோட்டையன் ஆர்.பி.உதயகுமார் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், ‘ஆர்.பி.உதயகுமார் காலையில் கூறிய கருத்திற்கு தெளிவான விளக்கத்தை மாலை அவரே தெரிவித்து விட்டார். அதனால், அது குறித்து கூற ஒன்றும் இல்லை’ என்றார். தொடர்ந்து, துரோகிகளால்தான் அதிமுகவுக்கு தோல்வி என்று பேசி உள்ளீர்களே? யார் அந்த துரோகிகள்? என செங்கோட்டையனிடம் கேட்டபோது, ‘அந்தியூர் தொகுதியை பொருத்தவரை இதுவரை சேவல் மற்றும் இரட்டை புறா சின்னத்தில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை அதிமுக தோல்வி அடைந்ததற்கு சில பேர் இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்ததை நாம் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினேன். நான் கூறிய அந்த வார்த்தை அந்தியூர் தொகுதிக்கு மட்டும் தான் பொருந்தும் என்றார். இரண்டு பொதுக்கூட்டங்களிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிடவில்லை என்று கேட்ட போது இரண்டு கூட்டத்திலும், நான் எதிர்க்கட்சி தலைவர், பொதுச்செயலாளர் என்று கூறியிருக்கிறேன் என்று கூறிவிட்டு நழுவி சென்றார்.