Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை; அதிமுக தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி எப்போது?.. மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெற்ற எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சரியான வியூகம் அமைக்க வேண்டும் என்று இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு, புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் முன்கூட்டியே களமிறங்கியுள்ளன. கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வாக்குறுதிகள், பிரசார உத்திகள் போன்றவை குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெற்ற எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றியை பெறவில்லை. அதாவது பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என தொடர்ச்சியாக 11 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இந்த தொடர்ச்சியான தோல்விகள், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. தொடர் தோல்வியால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். கட்சியின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், தனது தலைமையை உறுதிப்படுத்தவும், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்தால், கட்சியின் அரசியல் நிலை மேலும் பலவீனமடையும் என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது. மற்றொரு பக்கம், திமுக வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், பாஜக தமிழ்நாட்டில் தனித்து அரசியல் அடையாளத்தை உருவாக்கி வருகிறது. யார் யார் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் பாஜக-தான் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் யார் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. காரணம், தமிழகத்தில் பெரிய கட்சியாக பாஜக தங்களை நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையே, புதிய அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய் அதிமுகவை விமர்சித்து பேசத் தொடங்கியுள்ளதால், அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக கூடுதல் சவால் உருவாகியுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு வந்த எடப்பாடிக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டையாக உள்ளார். அவரை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி கூறி விட்டார். மேலும் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பாஜக அதிக இடங்களை கேட்கிறது. குறைந்தபட்சம் 50 இடங்களை அதிமுகவிடம் இருந்து பெறலாம் என்றும், எந்தெந்த தொகுதி என்ற பட்டியலையும் அதிமுக தலைமையிடம் அமித்ஷா கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பாஜக அதிக இடங்கள் மற்றும் குறிப்பிட்ட தொகுதிகளை கேட்பதால், தற்போது அதிமுகவினர் செல்வாக்கு உள்ள பல தொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதுபோன்ற நிலையில் கட்சியின் மாவட்ட செயலாளர்களிடம், இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுத்து கூறியதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக வேட்பாளர் தேர்வு, கூட்டணி தொடர்பான நிலைப்பாடு, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி பணிகள் போன்ற தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் மாவட்ட செயலாளர்களை எச்சரித்து, அனைவரையும் ஒருங்கிணைத்து முழு வீச்சில் தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். இதுவரை நடந்த தொடர் தோல்வியில் இருந்து மீண்டு, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சரியான வியூகம் அமைத்து வெற்றிபெற வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி கேட்டுக் கொண்டார்.