கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பாஜவை டப்பா இன்ஜின் என்ற விஜய்யிடம் இன்ஜினே இல்லை என்ற பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ‘‘தவெகவை பொறுத்தவரை தமிழக மக்கள் தெளிவாக முடிவு செய்துள்ளார்கள்.
இரண்டு இயக்கங்கள் மட்டுமே இந்த நாட்டை ஆள வேண்டுமா? புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த இயக்கம் வீறுநடை போட்டு கொண்டுள்ளது. பயம் என்ற அச்சம் இருப்பதால் விஜய்யை பற்றி ஒவ்வொருவரும் கருத்து சொல்கின்றனர். தன்னுடைய இடத்தில் வெற்றி பெற முடியாது என்ற தோல்வி பயம் காரணமாக இத்தகைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தவெக வெற்றியை தடுக்க முடியாது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, விஜய் முதலமைச்சராக வருவார்’’ என பதிலளித்தார்.
விஜய் குறித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, ‘‘தோல்வி பயம் ஏற்பட்டதால் இதுபோன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். என்ன கருத்து வேண்டுமானாலும் அவர் சொல்லட்டும். அதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
அதை ஒட்டுமொத்தமாக கொடுக்க வேண்டியது தானே. ஒவ்வொரு நாளும் சிந்தித்து தேர்தல் அறிக்கை தருவதில் இருந்தே, அவர் (எடப்பாடி பழனிசாமி) எவ்வளவு தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது’’ என பதிலளித்தார். ஒபிஎஸ் தவெக கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.


