Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எடப்பாடியை ஒருமையில் பேசியதற்கு எழுந்த கடும் கண்டனங்கள் மன்னிப்பு கோரினார் ஆதவ் அர்ஜூனா: வார்த்தைகள் இயல்பை மீறி விட்டதாம், புதிய விளக்கம்

* தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாக கொண்டுள்ளேன்

சென்னை: எடப்பாடியை ஒருமையில் பேசி கிண்டல் செய்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து எழுந்த கடும் எதிர்ப்பால் ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கோரினார். வார்த்தைகள் இயல்பை மீறி விட்டதாக விளக்கம் அளித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 30ம் தேதி நடந்தது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். முன்னதாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன், ஆதவ் அர்ஜூனா நடந்தபடியே பேசும் ஒரு வீடியோ வெளியானது.

அதில் அவர், “அண்ணாமலை தன்னுடன் 10 பேரை வைத்துக் கொண்டு 18, 20 சதவீதம் வாக்கு வங்கி வச்சிருக்காரு. இங்கே எடப்பாடியை நம்பி கூட்டணிக்கு யாரும் வர்ற மாதிரி தெரியல பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து கழற்றி விடும்” என்று பேசியிருந்தார். மேலும் எடப்பாடியை பழனிசாமியை ஒருமையில் விமர்சித்து இருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதிமுக மற்றும் பாஜகவினர் ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுதான் ஆதவ் அர்ஜூனாவின் உண்மை முகம் என்று விமர்சனம் செய்தனர். இன்னும் சிலர், இதே நிலை தொடர்ந்தால் அவர் தவெகவை முடித்துவிடுவார். எனவே கவனமாக இருங்கள் என விஜயை எச்சரித்தும் இருந்தனர். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து ஆதவ் அர்ஜூனா வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆதவ் அர்ஜூனா தன் எக்ஸ் பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம். எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான்.

அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும். என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன்.

தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.