Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை இழுத்துள்ளார்; எடப்பாடியை சந்திக்க விஜய் தொடர்பு கொள்ளவேயில்லை: அமைச்சர் நிர்மல் குமாருக்கு கே.பி.முனுசாமி பதிலடி

ஓசூர்: தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றியானது, அவர் இந்த சமூகத்திற்கு செய்த தியாகத்திற்கோ, உழைப்பிற்கோ கிடைத்த வெற்றி அல்ல. ரீல்ஸ் விட்டு, இன்ஸ்டாகிராமில் சினிமா போல உணர்ச்சிகளை தூண்டி, இளைஞர்களை தன்பக்கம் இழுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விஜய் தொடர்பு கொள்ளவில்லை என அமைச்சர் நிர்மல்குமாருக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா, ஓசூர் ரிங்ரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் ராமு தலைமை வகித்தார். அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் விஜய், ரீல்ஸ் விட்டு, இன்ஸ்டாகிராமில் சினிமா போல உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். மாயத்தோற்றத்தை உருவாக்கி, குழந்தைகள் தங்கள் பெற்றோரை விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தியதால் வெற்றி பெற்றுள்ளார். விஜய் வெற்றி இந்த சமூகத்திற்கு செய்த தியாகத்திற்கோ, உழைப்பிற்கோ கிடைத்த வெற்றி அல்ல, குறிப்பிட்ட சதவீதம் மக்கள் மாற்றத்தை விரும்பி அவருக்கு வாக்களித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் விஜய் சந்திக்க நேரம் கேட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தது தவறாகும். சந்திப்பு தொடர்பாக விஜய், எடப்பாடி பழனிசாமியையோ, அவரது அலுவலகத்தையோ தொடர்புக்கொள்ளவில்லை. மேலும், வேறு அதிமுக தலைவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் ‘இப்போது வேண்டாமென கூறியதாகவும்’ தெரிவித்ததில் உண்மை இல்லை. எந்த சூழலிலும் விஜய், அவருடைய அலுவலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கவில்லை. விஜய் பார்த்து படிப்பவர், அவரிடம் சரக்கு இல்லை. அதிமுக 31 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிக்காதவர் பெரும்பான்மை இல்லை என்றால் விஜய் யாரை சந்தித்திருக்க வேண்டும்?. நிர்மல்குமாரை விட ஆதவ் சந்தர்ப்பவாதி, அதிகாரம் உள்ள இடத்திற்கு சென்று விடுவார். நாங்கள் மறைந்தால் அதிமுக கொடி போடுவார்கள். ஆதவ் மறைந்தால் எத்தனை கட்சி போர்த்துவது. அவர் பேட்டியளிக்க தகுதியானவர் அல்ல. தமிழகத்தில் இடைத்தேர்தல் வரட்டும். எப்படி இருக்கும் என பாருங்கள். எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை காப்பாற்றியவர் அம்மா. அவர் வழியில் இபிஎஸ் உழைக்கிறார்.

தவெகவிற்கு கட்சி அமைப்பே இல்லை. அதிமுகவுக்கு குக்கிராமங்களில் கிளை உள்ளது. மனிதனுக்கு கொள்கை, சிந்தனை உள்ளது. உங்களிடம் இருப்பவர்கள், எத்தனை நாட்கள் இருப்பார்கள் என தெரியாது. ஒரு விநாடி மாறினால் என்ன நடக்கும். முதல்வர் பாசத்தோடு இருக்க வேண்டும். சினிமா பாணியில் பேசுவதால் முன்னாடி உள்ளவர்கள் கை தட்டலாம். முகம் சுழிப்பவர்கள் எத்தனை பேர் என்பதை உணர வேண்டும். உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிப்பேன் என கூறி ஆட்சிக்கு வந்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்படும் என்றார். சிங்கப்பெண் அதிரடிப்படை எத்தனை அலுவலகம் திறந்தீர்கள். அதற்கு நிதி ஒதுக்கியது எவ்வளவு, அவர்களுக்கு ஆடை கொடுத்தால் போதுமா. தனி திறனை எப்போது கற்பிப்பீர்கள். கஞ்சா விற்றவனை காட்டிக்கொடுத்தால் கொலை செய்கிறார்கள். உங்கள் கையில் தான் காவல்துறை உள்ளது. கடுமையான உத்தரவு போட்டு நடவடிக்கை எடுத்தால் தடுக்க முடியும்.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.