Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்: தவெக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

சென்னை: தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூரில் இருந்து தவெக அரசு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையில், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 1.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டனர்.

ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு உடல் உழைப்போடு சுமார் ரூ.25,000 விவசாயிகளுக்கு செலவாகி உள்ளது. இந்நிலையில், தண்ணீர் இல்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர் செய்த குறுவை நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ளனர். தவெக கூட்டணி அரசு உடனடியாக வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் அனுப்பி, நெற்பயிர்கள் கருகி பாதிப்படைந்துள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000ஐ நஷ்டஈடாக வழங்குவதுடன், மீதமுள்ள நெற்பயிர்களை பாதுகாக்கும் வகையில், விவசாயத்திற்கு 24 மணி நேரமும் விலையில்லா மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து தடையின்றி வழங்க வேண்டும் என்றும் பொய்க்கால் குதிரை தவெக கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* காவிரி பிரச்னை பற்றி தவெகவுக்கு எதுவுமே தெரியாது

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு காவிரி பிரச்னை பற்றி முழுமையாக எதுவுமே தெரியாது. அனுபவம் இல்லாததால் மற்ற கட்சிகளின் கருத்துகளை தவெக அரசு கேட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை.உச்ச நீதிமன்றத்தில் பெற்ற தீர்ப்பை கூட காப்பாற்ற கூட முடியாத அரசாக தவெக அரசு உள்ளது.

காவிரி பிரச்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் கூறுவதை தவெக அரசு கேட்கவில்லை. கர்நாடக அரசு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகளை மதித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டம் நடந்தது என மக்களுக்கு தெரியும். அதிமுக, திமுக என எந்த ஆட்சியாக இருந்தாலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கப்பட்டது. அதைபோல காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும். விவசாய பிரதிநிதிகளையும் அழைத்து கருத்துகளை பெற வேண்டும். அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.