புதுடெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த கூட்டு வலிமையால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் போர் பதற்றங்கள், சர்வதேச நெருக்கடிகள் மற்றும் வர்த்தக விநியோகச் சங்கிலி பாதிப்புகளால் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் சவால்களை சந்தித்து வந்தன. இந்த இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதமாக அபார வளர்ச்சி அடைந்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ பதிவில், ‘7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதம் நாடு முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களின் அசைக்க முடியாத உறுதிக்கும், உழைப்பிற்கும் கிடைத்த இந்த வெற்றி நமது கூட்டு வலிமையை வெளிப்படுத்துகிறது. 2020ம் ஆண்டு கொரோனா காலத்திற்குப் பிறகு உலகெங்கும் பொருளாதார ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்தியாவிற்குள் சிலர் அவநம்பிக்கையை விதைத்து தொடர் பொய்களைப் பரப்பி வருகின்றனர். அத்தகைய தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
உள்நாட்டு தயாரிப்புகளை ஆதரிப்பதன் மூலமும், சுயசார்பு பாரதத்தை முன்னெடுப்பதன் மூலமும் சுதந்திரத்தின் 100வது ஆண்டில் வளர்ந்த இந்தியாவை இளைஞர்களிடம் ஒப்படைக்க முடியும்’ என்று கூறினார். முன்னதாக ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.75.46 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் உண்மையான ஜிடிபி மதிப்பு, நடப்பு நிதியாண்டில் ரூ.81.36 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கி முன்னர் கணித்திருந்த 7 சதவீதத்தை விட மிக அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



