Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பொருளாதார நெருக்கடி

தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது பெட்ரோல், டீசல் விலை. 2007 முதல் 2012 வரையிலான காலக்கட்டத்திற்கு உலகம் சென்று கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் மந்த நிலை அதிகரித்து வருகிறது. ஒருபுறம் போர், மறுபுறம் பொருளாதார நெருக்கடி. இந்தியாவிலும் அதன் பாதிப்புகள் உணரத்தொடங்கி விட்டன. விண்ணை முட்டும் விலைவாசி அதற்கு சாட்சி. எந்தவித தடுப்பு நடவடிக்கையும் பிரதமர் மோடி வசம் இல்லை.

அதனால் தான் கொரோனா கால நெருக்கடிக்கு தயாராகுங்கள் என்று ஒற்றை வரியில் அழைப்பு விடுத்துவிட்டு அமைதியாகி விட்டார். எண்ணெய் நிறுவனங்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே செல்கின்றன. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை எக்குத்தப்பாக உயர்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் அப்பாவி மக்கள் தத்தளிக்கிறார்கள். இதுதான் இந்தியாவின் இன்றைய நிலை.

இதைப்பற்றி எந்தவித கவலையும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இல்லை. உலகளாவிய நெருக்கடிகளால் இந்தியாவுக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக பூசி மெழுகி உள்ளார். மேலும் மேற்கு ஆசியா நெருக்கடி, ஹார்மூஸ் நீரிணை நெருக்கடி, ரஷ்யா - உக்ரைன் போர் நெருக்கடி, ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் பதற்றம், விநியோக சங்கிலி பாதிப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் விலை, உர விலை. இவை அனைத்தும் சிறிய அளவில் அல்ல, மிகவும் கடுமையான விலை உயர்வுகள். இவற்றுக்கெல்லாம் அந்நியச் செலாவணி மூலமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். இவை சவால்களாக இருக்கப் போகின்றன. ஆனால், எனக்கு நம்பிக்கை உள்ளது. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

பிரதமரின் வழிகாட்டுதலுடன், நம்மால் உருவாக்கப்படாத இந்த சவால்களை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்றார். அவரது நம்பிக்கை பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கொண்டு போய் தள்ளி உள்ளது. 145 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் வெறும் 11 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு கிட்டத்தட்ட 7.5 உயர்ந்தால் என்னவாகும் என்பது தான் இந்த பெரிய பொருளாதார நெருக்கடிக்கு அறிகுறி. கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம், இறக்கம் இருப்பதால் தினமும் ரூ.1000 கோடி எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி 11 நாளில் லிட்டருக்கு ரூ.7.50 விலையை உயர்த்தி உள்ளது மோடி அரசு.

ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போது, அதன் பயன் நாட்டு மக்களுக்கு வழங்காமல் வரிகளை உயர்த்தி சுமார் ரூ.40 லட்சம் கோடி வரை வருவாய் பார்த்த மோடி அரசுதான், இப்போது சுமார் 50 நாளில் தினமும் ரூ.1000 கோடி இழப்பு ஏற்படுவதாக கூறி எண்ணெய் விலையை உயர்த்தி இருக்கிறது.

இந்த விலை உயர்வுகள் தற்போதைய கச்சா எண்ணெய் விலைகளைப் பற்றியது மட்டுமல்ல. இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து இருப்பதும் மிகவும் முக்கிய காரணம். மன்மோகன்சிங் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 61ஆக இருந்த போது, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த இன்றைய பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கள் வைரல். இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 96ஐ எட்டியிருக்கிறது. பிரதமரிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.