கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த முன்னாள் அரசு அலுவலரான முஸ்தபா, தரிசாக கிடந்த தமது நிலத்தைப் பண்படுத்தி பொன்விளையும் பூமியாக மாற்றி இருக்கிறார். நாவல்காடு ஞானதாசபுரத்தில் உள்ள அவரது வயலில் அவரைச் சந்தித்து பேசினோம். ``முஞ்சிறை ஒன்றியம் வட்டார வளர்ச்சி உதவி அலுவலராக பணியாற்றி கடந்த 1997ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். ஓய்வுக்கு பிறகு விவசாயம் செய்ய முடிவு செய்தேன். ஞானதாசபுரத்தில் எங்கள் பூர்வீக சொத்தான 7 ஏக்கர் வயல் உள்ளது. அந்த இடத்தில் நெல் சாகுபடி செய்யலாம் என முடிவெடுத்தோம். ஆனால் அந்த நிலம் தரிசாக கிடந்தது. அந்த நிலத்தின் மண்ணை ஆய்வு செய்தபோது, அமிலத்தன்மை அதிகமாக இருந்தது. இதனால் நெல் சாகுபடி செய்வதற்கு உகந்தது இல்லை என கூறினார்கள். ஆனாலும் அந்த நிலத்தை நெல் சாகுபடி செய்யும் அளவிற்கு மாற்ற நான் நினைத்தேன். அதன்படி பலரிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது அமிலத்தன்மையைப் போக்க சுண்ணாம்புச்சத்து சேர்க்க வேண்டும் என கூறினார்கள். ஒரு கிலோ சுண்ணாம்பு ரூ.20 என இருந்த நிலையில் ஏக்கருக்கு 300 கிலோ வீதம் 7 ஏக்கருக்கு 2100 கிலோ சுண்ணாம்பு போடலாம் என முடிவு செய்தேன். மொத்தம் ரூ.42 ஆயிரம் செலவு ஆகும் என கணக்கிடப்பட்டது. அப்போது ரூ.42 ஆயிரம் என்பது பெரிய தொகை என்பதால் மாற்று முறையில் சரிசெய்யலாமா என சிந்தித்தேன். அதன் பிறகு திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை பெற்றேன்.
அப்போது மலையடிவார மண்ணைப் போட்டு, அதனுடன் டோலமெட் என்ற மருந்தை கலக்கும்போது மண் நெல் சாகுபடி செய்யும் அளவிற்கு மாறிவிடும் என கூறினர். அதன்படி மலையடிவார மண்ணைப் போட்டேன். ஒரு கிலோ மண் ரூ.5க்கு கிடைத்தது. அதனுடன் டோலமெட் போட்டேன். அதிகாரிகள் கூறியபடி மண்ணில் இருந்த அமிலத்தன்மை மாறிவிட்டது. அதனைத்தொடர்ந்து நெல் சாகுபடி செய்ய முடிவு செய்தேன். 7 ஏக்கர் நிலத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திருப்பதிசாரம் 5, 3 ரக நெல்லை மட்டும் நிலத்தில் சாகுபடி செய்ய தீர்மானித்தேன். மேலும் நம்மாழ்வார் கூறிவந்த இயற்கை உரங்களைப் பயன்படுத்த திட்டமிட்டேன். இதனால் நம்மாழ்வாரைச் சந்தித்து பல ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் பெற்றேன்.
அதன்படி கன்னிப்பூ சாகுபடியின்போது திருப்பதிசாரம் 5 ரக நெல்லையும்,கும்பப்பூ சாகுபடியின்போது திருப்பதிசாரம் 3 ரகநெல் ரகத்தையும் பயன்படுத்தி வருகிறேன். திருப்பதிசாரம் 5 ரக நெல் 110 நாட்களில் அறுவடை ஆகிவிடும். திருப்பதிசாரம் 3 ரக நெல் 135 நாட் களில் அறுவடை ஆகிவிடும். கன்னிப்பூ சாகுபடி செய்வதற்கு முன்பு ஊட்டமேற்றப்பட்ட சாணத்தை பயன்படுத்தி வருகிறேன். இதற்காக ஒரு ஏக்கருக்கு 500 கிலோ சாணம், 500 கிலோ இலைதழை உரங்கள், 500 கிலோ நார்க்கழிவுகள், 2 கிலோ சூடோமோனாஸ், 2 கிலோ பேக்டம்பாக்ட்ரியா, 2 கிலோ அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை கலந்து வயல் அருகே குவியலாக வைத்து விடுவேன். அதன்மேல் 500 கிலோ செம்மண்ணைப் போட்டு மூடிவிடுவேன். சுமார் 2 மாத காலம் கடந்தபிறகு அனைத்து உரங்களும் மக்கிவிடும். அப்போது அதனை எடுத்து வயலில் இட்டு சாகுபடிப்பணியை மேற்கொள்வேன்.
சாகுபடிப்பணியை மேற்கொள்வதற்கு முன்பு நாற்றங்கால் தயாரிக்கப்பட்டு, நாற்றங்காலில் இருந்து எடுத்த நாற்றுகளை வயல்களில் 22 செ.மீ இடைவெளியில் நடவு செய்வேன். பின்னர் சாகுபடி செய்துள்ள நெல் வயலுக்கு காய்ச்சலும், பாய்ச்சலும் என்ற ரீதியில் தண்ணீர் கொடுத்து வருகிறேன். தண்ணீர் கொடுத்த பிறகு நிலத்தைக் காயப்போட்டு, அதன்பிறகு தண்ணீர் பாய்ச்சுவேன். இதனால் பயிர்கள் நல்ல செழிப்போடு வளர்கிறது. இதனைத் தொடர்ந்து சாகுபடி செய்த 22வது நாள் மீன் அமிலம் கொடுக்கிறேன். தொடர்ந்து 42வது நாளும் இரண்டாவது முறையாக மீன் அமிலம் கொடுப்பேன். கும்பப்பூ சாகுபடியின் போது 60வது நாளும் மீன் அமிலம் கொடுப்பேன். மீன் அமிலத்தை ஒரு லிட்டருக்கு 20 மில்லி மீட்டர் என்ற அளவில் கலந்து ஸ்பிரேயர் மூலம் தெளிப்பேன்.
வயல்களில் களை எடுப்பது, ஸ்பிரே செய்வது என தனித்தனியாக ஆட்களை பயன்படுத்திவருகிறேன். இதுதவிர பூச்சிகள் தாக்காமல் இருக்க நெல் சாகுபடி செய்த 60வது நாள் வேப்பெண்ணெய்க்கரைசல் கொடுப்பேன். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேெப்பண்ணெய் கலந்து பயிருக்கு கொடுத்து வருகிறேன். கதிர்வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பும் வேப்பெண்ணெய்க் கரைசல் கொடுக்கிறேன். இதனால் பூச்சி தாக்குதல் இருக்காது. நெல்பயிருக்கு தேவையில்லாமல் வேறு உரங்கள் போடுவதில்லை. செயற்கை நெல்லில், இயற்கை உரத்தை பயன்படுத்தி அதிக மகசூலை பெற்று வருகிறேன். இப்படி இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருவதால், ஒரு ஏக்கர் வயலில் 3 டன் நெல் கிடைக்கிறது. இதனால் மொத்தம் 7 ஏக்கரில் 20 முதல் 21 டன் வரை நெல் கிடைக்கிறது. நான் நெல் விவசாயம் செய்த நாளில் இருந்தே அரசின் நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் நெல் கொடுத்து வருகிறேன். தற்போது ஒரு ஏக்கரில் விளைவிக்கப்படும் நெல் ரூ.65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விலை போகிறது. ஆனால் உரம், உழவுப்பணி, தொழிலாளர் சம்பளம் என ஒரு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவு ஆகிறது. மீதமுள்ள பணம் லாபம்தான்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
முஸ்தபா: 94889 41180.
கும்பப்பூ சாகுபடியும் பூச்சி தாக்குதலும்
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு பருவ சாகுபடி நடந்து வருகிறது. கன்னிப்பூ சாகுபடியின்போது பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காது. அந்த வேளையில் வயல்களுக்கு ஊட்டமேற்றப்பட்ட சாணம் வழங்குகிறேன். ஆனால் கும்பப்பூ சாகுபடியின்போது பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வேளையில்தான் பூச்சித்தாக்குதல் அதிகமாக இருக்கும். இதற்காக கும்பப்பூ சாகுபடிக்கு முன்னதாக எனது வயலைச் சுற்றி நிற்கும் வேப்பமரத்தின் இலைகளை வெட்டி, வயலில் போட்டு மடக்கி உழுது விடுவேன். அதன்பிறகு தேவைக்கு ஏற்ப வேப்பெண்ணெய்க்கரைசலும் கொடுக்கிறேன். இதனால் பூச்சி தாக்குதல் எனது வயல்களில் இருக்காது என்கிறார்
முஸ்தபா.

