Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இ20 பெட்ரோலுக்கு எதிராக மனு கொடுக்க பிரதமர் வீடு நோக்கி பேரணி சென்ற கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்: போராட்டத்தில் மக்களும் இணைய அழைப்பு

புதுடெல்லி: இருபது சதவீதம் எத்தனால் கலந்த இ20 பெட்ரோலால், வாகனங்களின் மைலேஜ் குறைதல், இன்ஜின் பாதிப்பு மற்றும் தேய்மானம் குறித்து பல தரப்பு வாகன ஓட்டிகளும் வாகன உரிமையாளர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சுமார் 2.30 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்ட மனுக்களுடன் ஆம்ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சுமார் 100 பேர் டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் நோக்கி நேற்று பேரணி புறப்பட்டனர்.

அனுமதியின்றி நடத்தப்படும் இந்த பேரணிக்காக பிரதமர் இல்லத்திற்கு செல்லும் சாலைகளில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், 5, பிரோஸ் ஷா சாலையை தாண்டி யாரும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என காவல்துறை கூறியிருந்தது. அதே போல, பிரோஸ் ஷா சாலையில் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ’’இ20 பெட்ரோல் நடைமுறைக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைகளில் இதை எதிர்த்து குரல் கொடுப்பார்கள். பெட்ரோலில் எத்தனால் கலப்பால் இந்திய விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்பின் அழுத்தம் காரணமாகவே ஒன்றிய அரசு இதை ஊக்குவிக்கிறது. இது அமெரிக்க விவசாயிகளுக்கே பலன் தரும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு அமெரிக்காவிடம் பணிந்து விட்டது. இ20யிலிருந்து விடுபட விரும்பினால் மக்களும் பெருமளவில் வீதிக்கு வந்து போராட வேண்டும்’’ என்றார்.

* நாடாளுமன்றம் நோக்கி செல்ல அனுமதி மறுப்பு

எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டை திரும்பப் பெறக் கோரி டெல்லியை சேர்ந்த டெல்லி டாக்சி மற்றும் சுற்றுலா போக்குவரத்து, சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல நேற்று அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் இதற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்ததால் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

* தோல்வி அடைந்த அரசியலை உயிர்ப்பிக்க முயற்சி

கெஜ்ரிவாலின் பேரணி குறித்து பாஜ தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கெஜ்ரிவாலின் பேரணி அபத்தமானது, அர்த்தமானது, பொறுப்பற்றது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க கெஜ்ரிவால் தேவையற்ற சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கிறார் ’’ என்றார்.