மும்பை: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் (4 நாள்) பெங்களூருவில் நாளை தொடங்குகின்றன. இத்தொடரின் இறுதிப் போட்டி, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. 2026 துலீப் டிராபி தொடர் பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (சிஓஇ) வளாக மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இத்தொடரின் 2 காலிறுதி ஆட்டங்களில் கிழக்கு மண்டலம் வட கிழக்கு மண்டலம், வடக்கு மண்டலம் மேற்கு மண்டலம் மோதுகின்றன.
மத்திய மண்டலம் மற்றும் தென் மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் களமிறங்குகின்றன.
காலிறுதி மற்றும் அரையிறுதி 4 நாள் ஆட்டங்களாகவும், பைனல் மட்டும் 5 நாள் போட்டியாகவும் நடைபெறும். இறுதிப் போட்டி (செப். 6-10) பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சிஓஇ வளாகத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதால், பைனல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்குக்கு மாற்றப்படுவதாகவும் போட்டியைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
காலிறுதி ஆட்டங்கள் (ஆக.23—26) மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் (ஆக.30-செப்.2) பெங்களூரு சிஓஇ அரங்கிலேயே நடத்தப்படும். அந்த போட்டிகளைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த சீசனில் பைனல் மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், இம்முறை அனைத்து ஆட்டங்களும் நேரடி ஒளிபரப்பாக உள்ளன. 2025 பைனலில் தென் மண்டல அணியை வீழ்த்தி மத்திய மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மண்டல அணிக்காக 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.



