சென்னை: தென் மண்டல அணியுடனான துலீப் கோப்பை பைனல் டிராவில் முடிவடைந்த நிலையில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற கிழக்கு மண்டலம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் கடந்த 6ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் கிழக்கு மண்டலம் 708 ரன் குவித்த நிலையில், தென் மண்டல அணி 336 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 372 ரன் முன்னிலை பெற்ற கிழக்கு மண்டலம், ஃபாலோ ஆன் தராமல் 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. அந்த அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்திருந்தது.
குமார் குஷக்ரா 34 ரன், முகமது கவுனைன் குரேஷி 26 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். குஷக்ரா 46 ரன்னில் வெளியேற, குரேஷி - அனுகுல் ராய் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 150 ரன் சேர்த்தது.. குரேஷி சதம் விளாசி அசத்த, அனுகுல் ராய் அரை சதம் அடித்தார். ராய் 64 ரன் (112 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நிதீஷ் பந்துவீச்சில் படிக்கல் வசம் பிடிபட்டார். கிழக்கு மண்டலம் 99.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 388 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
குரேஷி 116 ரன் (190 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்), ஷமி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல்தர கிரிக்கெட்டில் குரேஷி தனது முதல் சதத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முடிவு தெரிய வாய்ப்பு இல்லை என்பதால், அத்துடன் ஆட்டத்தை முடித்துக்கொள்ள இரு அணி கேப்டன்களும் ஒப்புக்கொள்ள, போட்டி சரிசமனில் முடிந்தது. எனினும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கிழக்கு மண்டலம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி துலீப் கோப்பையை முத்தமிட்டது.
- இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடிய கிழக்கு மண்டல கேப்டன் இஷான் கிஷன் (270, 80) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- தென் மண்டல கேப்டன் திலக் வர்மா (மொத்தம் 266 ரன், ஒரு இன்னிங்சில் மட்டுமே அவுட்) தொடர் நாயகன் விருது பெற்றார்.
- முதல்தர கிரிக்கெட்டில், இஷான் கிஷன் கேப்டனாக தொடர்ந்து 16 போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்து வருகிறார்.
- நடப்பு துலீப் டிராபி தொடரில் இஷான் விளையாடிய 5 இன்னிங்சில் 409 ரன் குவித்து முதலிடம் பிடித்தார் (சராசரி 102.25).

