போதைப்பொருள் சம்மன் அனுப்பிய விவகாரம்; நடிகை சாரா அலிகான் மன்னிப்பு கேட்காதது தப்பு: நட்பு முறிந்துவிட்டதாக பள்ளிப்பருவ நண்பர் ஆதங்கம்
மும்பை: கடினமான காலகட்டத்தில் கைவிட்ட பாலிவுட் நடிகை சாரா அலிகானுடன் இருந்த நீண்டகால நட்பை முறித்துக் கொண்டதாக அவரது நெருங்கிய நண்பர் ஓரி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020ம் ஆண்டு மரணமடைந்தபோது, பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோவாவில் தங்கியிருந்த நடிகை சாரா அலிகானுக்கு விசாரணை சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், தனியார் இணைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாரா அலிகானின் பள்ளிப்பருவ நண்பரான ஓரி, சாரா அலிகான் மற்றும் அவரது தாயார் அம்ரிதா சிங் ஆகியோரை சமூகவலைதள பக்கங்களில் இருந்து நீக்கியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், ‘கல்லூரி காலத்திலிருந்தே 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இணைபிரியா நண்பர்களாக பழகி வந்தோம்; கோவாவில் சாரா போதைப்பொருள் வழக்கில் சிக்கி தவித்தபோது, அனைவரும் அவரை விட்டு விலகும்படி எச்சரித்தும் அவருடன் நான் உறுதுணையாக நின்றேன். ஆனால், என் வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டத்தில் அவர் என்னை ஒருமுறைகூட செல்போனில் அழைத்து நலம் விசாரிக்காமல் ஒதுங்கிவிட்டார். இது என் மனதை ஆழமாக காயப்படுத்தியதால் அவருடனான நட்பை முறித்துக் கொண்டதோடு, இந்த விவகாரத்தில் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்கவே இல்லை. இதன் காரணமாகவே சாரா அலிகான் மற்றும் அவரது தாயாரை எனது சமூகவலைதள பக்கங்களில் இருந்து முற்றிலுமாக புறக்கணித்துவிட்டேன்’ என்று ஆதங்கத்துடன் கூறினார்.


