சேலம்: சேலம் அன்னதானப்பட்டி மணியனூர் அங்காளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சந்தோஷ்குமார் (21), வெள்ளித்தொழிலாளி. இவர், கடந்த 31ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர், நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வந்து, தனது அறையில் தூங்கியுள்ளார். பின்னர், காலையில் அவரது தாயார் சாந்தி, வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு புறப்பட்டார். அப்போது, ‘தான் வேலைக்கு வரவில்லை’ என கூறிவிட்டு, வீட்டிலேயே தூங்கியுள்ளார் சந்தோஷ்குமார். மதியம் சாந்தி வீட்டிற்கு வந்தபோது, கட்டிலில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மர்மமான முறையில் சந்தோஷ்குமார் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர், அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ெதாடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் சந்தோஷ்குமார், போதைக்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது. நேற்று வீட்டிற்கு வந்தபோது, அதிகமான போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர், போதை மாத்திரை, ஊசி பயன்படுத்தினாரா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், நேற்று சந்தோஷ்குமாரை வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்ற அவரது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

