கொழும்பு: பாகிஸ்தானில் இருந்து சரக்கு கன்டெய்னரில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு நிர்வாகத்தின் புதுடெல்லி அலுவலகம் மற்றும் இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவை கடந்த மாதம் 14ம் தேதி முதல் 29ம் தேதி வரை பெறப்பட்ட ரகசிய உளவு தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த சந்தேகத்திற்கு இடமான சரக்கு கன்டெய்னரை இடைமறித்து சோதனை நடத்தின.
இந்த சோதனையின்போது குளியல் டவல்களில் மறைத்து போதைப்பொருள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.200 கோடி மதிப்பிலான 463கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உட்பட பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.



