போதைப்பொருள் கடத்தல் கும்பல் அட்டகாசம்; போலீசாரை தாக்கி கார் ஏற்றிக்கொல்ல முயற்சி; பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் லதா, கான்ஸ்டபிள் விக்னேஷ் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை வந்தவாசி சாலை, ஆரணி சாலை, 4 முனை சந்திப்பு ஆகிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆரணி சாலை வழியாக வந்த காரை, கான்ஸ்டபிள் விக்னேஷ் தடுத்து நிறுத்தினார். இதனால் திடீரென காரை நிறுத்திவிட்டு இறங்கிய டிரைவர், விக்னேஷை தாக்கி கீழே தள்ளினார்.
பின்னர் வேகமாக காரை ஓட்டிச் சென்றார். வழியில் நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் லதா காரை தடுக்க முயன்றார். உடனே டிரைவர், சப்-இன்ஸ்பெக்டர் லதா மீது காரை ஏற்றி கொல்வதுபோல் வேகமாக வந்தார். எஸ்ஐ லதா சமயோசிதமாக விலகியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து கார் மின்னல் ேவகத்தில் பறந்தது. இதனை கண்ட பொதுமக்கள் பைக்குகளில் காரை விரட்டி பழம்பேட்டை அரசுப்பள்ளி அருகே மடக்கிபிடித்தனர். பின்னர் காரில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து, இன்ஸ்பெக்டர் குணபாலனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார், கார் மற்றும் அதில் இருந்த 2 பேரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
அதில் கார் டிரைவர் ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா ஜிடி நல்லூர் கிராமம் பட்டாபி பகுதியை சேர்ந்த கணேச பெருமாள்(46) என்பதும், மற்றொருவர் ஜி.டி.நல்லூர் முக்களத்தூர் பகுதியை சேர்ந்த சிவபிரசாத்(30) என்றும் தெரியவந்தது. காரை சோதனையிட்டபோது, 25 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது. அதனை சித்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதேபோல் இவர்கள் வாரத்திற்கு 2 முறை குட்காபொருட்களை விழுப்புரத்திற்கு கடத்திச்சென்று கடைகளுக்கு சப்ளை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸ்காரருக்கு ஹெச்.எம் ‘பளார்’
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கடநாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் சீனிவாசன் (57). இவர், நேற்று முன்தினம் ஊட்டி நகரில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த கார் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் சீனிவாசனை பிடித்து போலீஸ் வாகனத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது, திடீரென போலீஸ்காரர் ஒருவரின் கன்னத்தில் சீனிவாசன் அறைந்தார். இதனால், கோபம் அடைந்த அந்த போலீஸ்காரரும் சீனிவாசனை தாக்கினார். இந்த மோதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சீனிவாசனை போலீசார் ஊட்டி பி1 காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் குடிபோதையில் காரை இயக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது 296 (பி) ஆபாசமான வார்த்தைகள் பேசியது, 115 (2) கன்னத்தில் அறைந்தது, 132 மற்றும் 351 (2) அரசு ஊழியரை தாக்கியது, 185 குடிபோதையில் வாகனத்தை இயக்கியது ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.



