ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், வழக்கமான விவசாயப் பணிகளுக்கு இடையே வயல்வெளிகளுக்கு மேலே பறக்கும் ஒரு சிறிய ட்ரோன், அங்குள்ள பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்துக்கான அடையாளமாக மாறியிருக்கிறது. அந்த ட்ரோனின் ரிமோட்டை மிகுந்த தன்னம்பிக்கையோடு கையில் வைத்திருப்பவர் குமுதினி ஸ்வைன் இன்று அவர் அப்பகுதி மக்களால் ‘ட்ரோன் திதி’என்று அன்பாக அழைக்கப்படுகிறார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், தான் பணியாற்றிய நிறுவனம் மூடப்பட்டதால் கணவருடன் வேலை இழந்து சொந்த ஊருக்குத் திரும்பினார் குமுதினி. எதிர்காலம் குறித்த கேள்வியுடன், குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் காய்கறிகளைப் பயிரிடத் தொடங்கினார். ஆரம்பத்தில் குடும்பத்தை நடத்துவதற்கான வாழ்வாதாரமாக மட்டுமே இது இருந்தது. ஆனால், தரமான விதைகள் மற்றும் உரங்கள் கிடைக்காதது, விளைபொருட்களுக்கு உரிய விலை இன்மை, இடைத்தரகர்
களின் ஆதிக்கம், அதிகரிக்கும் விவசாயச் செலவுகள் எனப் பல விவசாயிகள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்னைகளை அவர் நேரில் உணர்ந்தார்.
தனி ஆளாகப் போராடுவதைவிட, விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்பினார். வீடு வீடாகச் சென்று விவசாயிகளிடம் தமது திட்டத்தைப் பற்றிப் பேசியபோது, பணத்தை முதலீடு செய்யப் பலரும் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர். ஆனாலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து பேசி அவர்களை ஒன்றிணைத்தார். இதன் விளைவாக ‘‘மஹீரா ஃபார்மர் புரொடியூசர் கம்பெனி'' உருவானது. 35 விவசாயக் குழுக்களுடன் 700 விவசாயிகளைக் கொண்டு தொடங்கிய இந்த அமைப்பு, இன்று 960 உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கூட்டமைப்பாக பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இதில் கணிசமான அளவு பெண்களும் இளம் விவசாயிகளும் அங்கம் வகிக்கின்றனர்.
விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதுடன், குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்கான பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளும் இந்த அமைப்பின் மூலம் எடுக்கப்பட்டன. குறிப்பாக, வயல்களில் வீணாகும் நெல் வைக்கோலைக் கொண்டு காளான் வளர்ப்பு தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டது. இதன்மூலம் பெண்கள் வீட்டிலிருந்தபடியே தங்களுக்குத் தேவையான கூடுதல் வருமானத்தைப் பெற்றனர். ஆடு வளர்ப்பு, தையல் போன்ற சிறு துணைத் தொழில்களிலும் பெண்கள் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
ஆனால், நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்துடன் இணைத்ததுதான் இந்த அமைப்பின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். இதற்காகப் புனே நகருக்குச் சென்று வேளாண் ட்ரோன் இயக்குநருக்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்று அதிகாரப்பூர்வ சான்றிதழையும் பெற்றார் குமுதினி. பின்னர் மஹீரா அமைப்புக்காக ஒரு பிரத்தியேக ட்ரோன் வாங்கப்பட்டது. முன்பு ஒரு ஏக்கர் நிலத்தில் திரவ உரம் அல்லது பூச்சிக்கொல்லி தெளிக்க, விவசாயிகள் முதுகில் கனமான தொட்டியைச் சுமந்து மணிக்கணக்கில் கடினமாக உழைத்தனர். ரசாயனங்களின் நேரடி பாதிப்பும் உடலைக் கெடுத்தது. ஆனால், ட்ரோன் வந்த பிறகு இந்த வேலை மிகக் குறைந்த நேரத்தில் எளிதாக முடிந்துவிடுகிறது. நேரமும் உழைப்பும் பெருமளவு மிச்சமாவதுடன், விவசாயிகளுக்கான தெளிப்புச் செலவும் கணிசமாகக் குறைகிறது.
வானில் ட்ரோனை லாவகமாக இயக்கும் குமுதினியைப் பார்க்கும் கிராம மக்களின் பார்வையும் இப்போது முற்றிலும் மாறியுள்ளது. டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்களை இயக்குவது ஆண்களின் வேலை மட்டுமே என்ற பழைய எண்ணம் தகர்க்கப்பட்டு, ஒரு பெண் நவீன ட்ரோனை இயக்குவது அப்பகுதியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. தொழில்நுட்பம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை மட்டுமின்றி, அசைக்க முடியாத தன்னம்பிக்கையையும் புதிய சமூக அடையாளத்தையும் கம்பீரமாகக் கொடுத்துள்ளது.
விவசாயிகளின் பிரச்னை விளைச்சலோடு முடிவதில்லை என்பதையும் குமுதினி நன்கு உணர்ந்திருந்தார். விளைபொருளை சரியான சந்தையில் லாபகரமான விலைக்கு விற்பதுதான் அவர்களின் அடுத்த சவால். இதற்காக விவசாயிகளின் விளைபொருட்களை மொத்தமாகச் சேகரித்து நேரடியாகச் சந்தைப்படுத்தும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆன்லைன் சந்தை வாய்ப்புகளும் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டதால், இடைத்தரகர்களின் ஆதிக்கம் முற்றிலுமாகக் குறைந்து விவசாயிகளின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது.
இந்த நெடிய பயணத்தின் உண்மையான வெற்றி, கிடைத்த வருமானத்தில் மட்டுமல்ல; பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியிலும் தெளிவாகத் தெரிகிறது. வேலை இழந்து இரண்டு ஏக்கர் நிலத்தை நம்பி வாழத் தொடங்கிய குமுதினி ஸ்வைன், இன்று நூற்றுக்கணக்கான விவசாயிகளை ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தியாக மாறியிருக்கிறார். அவர் இயக்கும் அந்தச் சிறிய ட்ரோன், பெண்களின் தன்னம்பிக்கைக்கும் விவசாயப் புரட்சிக்குமான ஒரு பெரிய மாற்றத்தின் சின்னம்.
- எஸ். ஆர்த்தி


