சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப முடியாததால் காய்ந்து வீணான 50 டன் கரும்புகள்: விவசாயி வேதனை
திருவள்ளூர்: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப முடியாததால், 50 டன் கரும்பு காய்ந்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு 2025-26ம் ஆண்டு அரைவைப் பருவத்திற்கு 2051 விவசாயிகளிடமிருந்து 7505 ஏக்கர் கரும்பு, ஆலைக்கு பதிவு செய்யப்பட்டு 2 லட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பு அரைவை செய்திட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கரும்பு விவசாயிகள் முன்பதிவு செய்தனர். பதிவு செய்ததின் அடிப்படையில் கரும்பு விவசாயிகளிடமிருந்து வாகனம் மூலம் கரும்பை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற கரும்பு விவசாயி, தனது 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். கடந்த 7ம்தேதி கரும்பை அரவைக்கு தயாராக வைத்திருக்க ஏதுவாக வெட்டி தயார் நிலையில் வைத்திருக்குமாறு ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். இதனால், கூலி ஆட்களைக் கொண்டு கிட்டத்தட்ட 4 நாட்களாக 50 டன் எடை கொண்ட கரும்பை வெட்டியுள்ளனர். ஆனால், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து வாகனத்தை அனுப்பி கரும்பை எடுத்துச் செல்லாததால், 50 டன் கரும்பு காய்ந்து போனது. கடன் வாங்கி கரும்பு பயிர் செய்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் கரும்பு வீணாவதாக விவசாயி கார்த்திகேயன் குற்றம் சாட்டினார்.
250 டன் கரும்பு தருவதாக பதிவு செய்த நிலையில், 50 டன் கரும்பு காய்ந்து போனதால் விரக்தியடைந்த விவசாயி கார்த்திகேயன் ஆலை நிர்வாகத்திடம் பேச முயன்றபோது, யாரும் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. முறையாக நிர்வாகம் செய்யாததும், இதுபோன்ற குளறுபடிக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், ஆந்திராவில் இருந்தும் கரும்பை பெறும் ஆலை நிர்வாகம் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து கரும்பை பெறாதது ஏன் என்றும் குற்றம் சாட்டினர்.