Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கையால் நெய்யப்படும் கனவுகள் இது பூஜா ஜெயின்

‘சங்கி யார்ன்’ (Chunky Yarn) ஹேண்ட்பேக்குகள். கண்களை கவரும் நிறங்கள், பார்ப்பதற்கே கேண்டி மிட்டாய்கள் போன்ற ஒரு தோற்றம். நிச்சயம் ஜென் Z, அல்லது ஜென் z மனநிலைகொண்ட யாரும் இந்த ஹேண்ட் பேக்குகளுக்கு டிக் செய்வார்கள். இதனை பிரத்தியேகமாக தனது கைகளால் செய்து வருகிறார் பூஜா ஜெயின். எங்க வாங்கின இந்த ஹேண்ட் பேக் என யாரும் நிறுத்தி கேட்பார்கள். அப்படி ஒரு தோற்றம். ஆனால் இது அத்தனையும் நூல் என்றால் நம்பமுடிகிறதா. அதுதான் சங்கி யார்ன் நூல். தனது பிரத்தியேக ஹேண்ட் பேக்குகள் குறித்துச் சொல்ல துவங்கினார் பூஜா:

உங்களைப் பற்றியும், உங்கள் பின்னணி பற்றியும் கொஞ்சம் சொல்லுங் களேன்...

நான் பூஜா ஜெயின். கர்நாடகாவில் உள்ள பல்லாரி தான் என் சொந்த ஊர்; படிச்சதெல்லாம் அங்கதான். அப்புறம் 25 வருஷத்துக்கு முன்னாடி எங்க குடும்பம் சென்னைக்கு ஷிப்ட் ஆகிட்டாங்க. மதுரையைச் சேர்ந்த கிஷன் ஜெயின் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, இப்போ மதுரையில் வசிக்கிறேன். எங்களுக்கு ஹியா, ஹீர் ஜெயின் இரண்டு மகள்கள், ஆதி என்ற ஒரு மகன் என மூன்று குழந்தைகள் இருக்காங்க.

இந்த ‘சங்கி யார்ன்’ ஹேண்ட்பேக் செய்யும் ஐடியா எப்படித் தோன்றியது?

எனக்கு மூன்றாவது பிரசவத்திற்குப் பிறகு கடுமையான முதுகுவலியும், ‘ஸ்லிப் டிஸ்க்’ பிரச்சனையும் இருந்தது. இதனால் 6 மாதங்களுக்கு முன்பு முதுகுத்தண்டில் ஒரு அறுவை சிகிச்சை (Spine Operation) செய்துகொண்டேன். ஆபரேஷனுக்குப் பிறகு வீட்டிலேயே முடங்கி இருந்தது ரொம்பவே போர் அடித்தது. போட்டோகிராபி, பாட்டுன்னு ஏதாச்சு பண்ணலாம்னா குழந்தைகளையும் கவனிக்கணும், வெளியே போகவும் முடியாது. அப்போதான் இணையத்தில் தடிமனான நூலால் செய்யப்பட்ட இந்த ‘சங்கி யார்ன்’ பேக் கண்ணில் பட்டது. பார்த்த உடனே எனக்கு ரொம் பிடித்துவிட்டது; இதை நாம ஏன் கத்துக்கக் கூடாதுனு தோணுச்சு.

இந்த ‘சங்கி யார்ன்’ ஹேண்ட்பேக்குகள் பார்ப்பதற்கு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே, இதன் சிறப்பம்சம் என்ன?

ஆமாம், இது சாதாரண நூல் கிடையாது; சுமார் 2.5 mm தடிமன் கொண்டது. வெளிநாடுகளில் 2024 வாக்கில் தான் இது பெரிய ட்ரெண்டாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் என் தந்தை பிசினஸ் விஷயமாக சீனா சென்றபோது, அங்கே இருந்து கொஞ்சம் மெட்டீரியல் வாங்கித் தரச் சொன்னேன். இப்போது இந்தியாவிலேயே கிடைக்கிறது. யூடியூப் மற்றும் வெளிநாட்டு வீடியோக்களைப் பார்த்துப் பார்த்துத் தான் இதைக் கத்துக்கிட்டேன். பல தவறுகள் செய்து, அதன் பிறகு தான் முழுமையான பினிஷிங் கொண்டுவர முடிந்தது.

ஒரு பேக் செய்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

சரியான தையல், பினிஷிங், பிராண்டிங், மேக்னட் லாக் என எல்லாமே சரியாக அமைய ஒரு பேக் செய்ய 5 மணி நேரம் வரை ஆகும். நூல் மிகவும் தடிமனாக இருப்பதால், கையில் ஊசி குத்தி பலமுறை காயங்கள் கூட ஆகியிருக்கின்றன. தற்போது வெல்வெட், பாலியஸ்டர் காட்டன் மிக்ஸ், லெதர் மற்றும் மெட்டாலிக் என 4 வகைகளில் செய்கிறேன்.

மக்களுக்கு இந்த பேக்குகள் பிடித்துள்ளதா? இதன் விலை விவரங்கள் என்ன?

கண்டிப்பா! இது இந்தியாவில் ரொம்பவே புதிய கான்செப்ட் என்பதால் எல்லோருமே விரும்பி வாங்குகிறார்கள். சாதாரண வகை பேக்குகள் ரூ. 2,000-ல் இருந்து தொடங்குகிறது. லெதர் மற்றும் மெட்டாலிக் நூல்கள் விலை அதிகம் என்பதால், அந்த பேக்குகள் ரூ. 6,000 முதல் 8,000 வரை விற்பனையாகின்றன. ஜீன்ஸ், கேஷுவல் ஆடைகள் முதல் கிராண்டான சேலைகள், பார்ட்டி வேர் வரை அனைத்து உடைகளுக்கும் ஏற்ற வகையில் கான்ட்ராஸ்ட் நிறங்களில் இதைப் பயன் படுத்தலாம்.

குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு இந்த பிசினஸை எப்படி பேலன்ஸ் செய்கிறீர்கள்?

என் கணவரும் குழந்தைகளும் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டாக இருக்கிறார்கள். மே மாதத்தில் தான் ‘பெல்லா போஸா’ என்ற பெயரில் பிராண்ட் ஆகத் தொடங்கினேன். கிருஷ்ணரின் தீவிர பக்தை என்பதால், பிராண்ட் லோகோவில் மயிலிறகு இருக்கும்படி டிசைன் செய்துள்ளேன். வீட்டில் இருந்தபடியே என் பேஷனைத் தொழிலாக மாற்றியது எனக்குப் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

இன்னமும் இந்த பிசினஸை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும். ஒரு சிலர் இந்த ஹேண்ட் பேக்குகளை விற்பனை செய்கிறார்கள் ஆனால் பெரும்பாலும் அவங்க சொந்தமா இதை உருவாக்கி விற்பனை செய்யறது கிடையாது. மொத்தமாக வாங்கித் தான் விற்பனை செய்யறாங்க. அதுவும் கூட அரிதாகத் தான் பார்க்க முடியுது. எனக்கு தெரியாது தமிழ்நாட்டிலேயே மிகச் சிலர்தான் இந்த ஹேண்ட்பேக்குகளை கைகளால் செய்யறாங்க. அந்த வகையில் என்னுடைய ஹேண்ட் பேக் இன்னமும் நம்பகத்தன்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். பயன்படுத்திய பிறகு காற்று போகாத பையில் கவர்செய்து வைத்தாலே போதுமானது. இப்போ பண்டிகை காலம் உங்க கிராண்ட் உடைக்கு இந்த ஹேண்ட்பேக் ரொம்ப கச்சிதமா பொருந்தும்.

- ஷாலினி நியூட்டன்