கனவு விருது பெற்ற ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா: பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு
கனவு ஆசிரியர் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்டது. கனவு ஆசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களுக்கு 19.2.2023 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அவ்விழாவில் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வானவர்களுள், 75 சதவீதம் முதல் 90 சதவிதம் வரை மதிப்பெண்கள் பெற்ற 325 ஆசிரியர்கள் உள்நாட்டு கல்விச் சுற்றுலாவிற்கும், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவிற்கும் அழைத்து செல்லப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி 75 சதவீதம் முதல் 90 சதவிதம் வரை மதிப்பெண் பெற்ற 325 ஆசிரியர்கள் 24.4.2024 முதல் 1.5.2024 வரை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அழைத்து செல்லப்பட்டனர். 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற 54 ஆசிரியர்கள் (32 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் 22 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்) 23.10.2024 முதல் 28.10.2024 வரை 6 நாட்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவிற்கு செல்ல நேற்று காலை சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டனர். அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களுடன் பிரான்சுக்கு புறப்பட்டு சென்றார்.