நீ ண்ட நெடிய வரலாறு கொண்ட திராவிட முன்னேற்ற கழகத்தை, கலைஞரின் மறைவுக்கு பிறகும் கட்டிக் காத்து வெற்றிபெற செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, தமிழகத்தில் ஓர் இடத்தை தவிர்த்து மற்ற 38 இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 2021ல் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற குறிக்கோளோடு தமிழகத்தில் தீவிர பிரசாரங்கள் மேற்கொண்டார். அதன் பலனாக திமுக கூட்டணி, 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
பெரிய நகரங்களை தாண்டி பெரும்பாலான மாவட்டங்களிலும் பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலை வாய்ப்பு, அப்பகுதியின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தினார். இதன்பலனாக தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் கணிசமாக உயர்ந்து, தேசிய சராசரியை விட 1.77 மடங்கு அதிகமாக, சுமார் ரூ.3.62 லட்சம் என்ற நிலையை எட்டியுள்ளது. இந்தியாவில் அதிக தனிநபர் வருமானம் கொண்ட முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இது மாநிலத்தின் வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்துறை முன்னேற்றத்தை காட்டுகிறது.
இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டின் வருமானம் 1.77 மடங்கு அதிகம். 2030-31க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை நோக்கி தமிழ்நாடு பயணிக்கிறது. தனிநபர் விமர்சனம், அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு பதிலடியாக மக்களுக்கான ஆட்சியை நடத்தி காட்டி உள்ளார். கடந்த 5 ஆண்டில் அனைவரையும் அரவணைத்து செல்லும் மு.க.ஸ்டாலினின் இந்த போக்கு அவர் மீது அதீத நம்பிக்கையை மக்களுக்கு உண்டாக்கியது. 2 நாடாளுமன்ற தேர்தல், 2 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி கட்சிக்காரர்களை அரவணைத்து சென்று தொகுதி பங்கீடு முடித்து தொகுதிகளை பிரித்து கொடுத்து 164 தொகுதிகளுக்கும் திமுக வேட்பாளர்களை அறிவித்தது, இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். மகளிர் உரிமை தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டும் என்பதற்கு சான்றாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.
தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ள நிலையில், முதல் நாளான நேற்றே முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த கையோடு திறந்த ஜீப்பில் தனது பிரசாரத்தை துவங்கி விட்டார். திருவாரூரில் இன்று பிரசாரம் செய்கிறார். திமுக கூட்டணிக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு பெருகி வருவதால் மு.க.ஸ்டாலின், மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை அமைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


