திராவிட மாடல் அரசின் சாதனையாக தமிழ்நாட்டில் 2 மிகப்பெரிய கார் நிறுவனங்கள் திறப்பு: முதல்வர் 9ம் தேதி திறந்து வைக்கிறார், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் 2 மிகப்பெரிய கார் நிறுவனங்களை வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் -லேண்ட் ரோவர் கார் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.9,000 கோடி முதலீட்டில், ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் தொழிற்சாலையை அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் பகுதியில், சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் இது அமைந்துள்ளது. சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) கார் மாடல் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் உற்பத்தித் திறனை படிப்படியாக அதிகரித்து, ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்கள் வரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்து.
மேலும், இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. பல ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த தொழிற்சாலையை வரும் 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
முதலில் வின்பாஸ்ட் வரும்போது வேறு மாநிலத்திற்கு சென்றது என்று சொன்னார்கள். ஆனால், வின்பாஸ்ட் நிறுவனம் திறக்கப்பட்ட 14 மாதங்களில் பேக்டரிக்கான சோதனை ஓட்டம் நடந்தது. தற்போது வின்பாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் நான்காவது டாப் செல்லிங் காராக இருக்கிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய நாள்.
வரும் 9ம் தேதி ராணிப்பேட்டையில் டாடா, ஜேஎல்ஆர் தொழிற்சாலை திறக்கபட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், டாடா தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். ஒன்றரை மாதத்தில் அதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆட்சியில் 2 மிகப்பெரிய கார் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசின் வேகம். இவ்வாறு அவர் கூறினார்.


